நாட்டுப்பற்றாளர் கதிர் மாஸ்டர் என அழைக்கப்படும், நடராசா கதிர்காமநாதன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று 2019/12/18ம் நாள் பிரான்ஸ் தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான வில்தனுஸ்(villetaneuse) பகுதியில் நடைபெற்றுள்ளது.
யாழ் மாவட்டம் வயாவிளானைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் தேசியம் சார் பணிகளில் ஈடுபட்டு வந்ததுடன், பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம், ரி.ரி.என் (T.T.N) தொலைக்காட்சி சேவை போன்றவற்றின் நீண்டகால செயற்பாட்டாளராகவும், பிரான்சில் செயற்பட்டுவரும் தமிழ்ச்சோலை பள்ளியின் தொடக்ககால ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
தன்னுடைய மருத்துவ தொழிலூடாக எமது மக்களின் நலனுக்காக இறுதி வரை சேவையாற்றியிருந்தார். இவரது தேசியப்பணி எழுத்துக்களால் எடுத்துச் சொல்ல முடியாத வகையில், தாய் நிலம் வரையில் நீண்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2019/12/08ம் நாள் சுகவீனம் காரணமாக, பிரான்சில் சாவடைந்தார். தமிழ் தேசியத்திற்கும், சமூகத்திற்கும் இவர் ஆற்றிய பணிகளுக்காக இவருக்கு நாட்டுப்பற்றாளர் நிலை வழங்கி மதிப்பளிக்கப் பட்டுள்ளது.
இவரது இறுதி வணக்க நிகழ்வில் தேசிய செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் பங்குபற்றி தமது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளனர்.