லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கியதும், எல்லைப்புறப் பகுதிகளான பிரதேசங்களுக்கும் இன்றைய தினம் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கொரோணா வைரஸ் காரணமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்படடுள்ளமையை அடுத்து அனைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதித்துள்ளது. அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் மக்கள் பல்வேறு வாழ்வாதார இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறப் பிரதேச மக்களின் அன்றாட வாழ்வினைக் கருத்திற்கொண்டு இன்றைய தினம் லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினால் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல பிரதேசங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன.
முன்னாள் கெயார் நிறுவனத்தின் பணிப்பாளர் தாமோதரம்பிள்ளை தங்கவேல் அவர்களின் தலைமையிலும், பிரதேச முக்கியஸ்தர்களின் ஏற்பாட்டிலும் மேற்கொள்ளப்பட்ட இச் செயற்திட்டத்தில் கிரான் விஸ்ணு ஆலய நிருவாகத்தினர், வந்தாறுமூலை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர் பொன்னுத்துரை உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அந்தவகையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குடும்பிமலை, தடாணை, ஈச்சையடி, மட்டப்புல்தோட்டம், கூழாவடி, பள்ளத்துச்சேனை மற்றும் கிரான் போன்ற பிரதேச மக்களுக்கு சுமார் 300க்கும் மேற்பட்ட உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.