நான் ஏலவே மாகாணசபை உறுப்பினராக பிரதேசசபை உபதவிசாளராக தவிசாளராக மக்கள்சேவையாற்றியுள்ளேன். நான் இத்தேர்தலில் போட்டியிட எண்ணம்கொண்டிருக்கவில்லை.எனினு ம் எனது கட்சி கேட்டுக்கொண்டதற்கிணங்க தேர்தலில் இறங்கநேரிட்டது. தேர்தலுக்காக மட்டும்அரசியல் செய்பவன் நானல்ல.
இவ்வாறு கூறுகிறார் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சர்ச்சைக்கு மத்தியில் நியமிக்கப்பட்ட நாவிதன்வெளிபிரதேசசபைத் தவிசாளர் தவராசா கலையரசன்.
இருதடவைகள் தவிசாளராகவும் ஒருதடவை மாகாணசபை உறுப்பினராகவும் சேவையாற்றிய த.கலையரசன் இருதடவைகள் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு கூடியவாக்குகளைப்பெற்றிருந்தார் .
கடந்த2015பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இ.த.அ.கட்சி சார்பில் போட்டியிட்ட க.கோடீஸ்வரன் 17799வாக்குகளைப்பெற்று தெரிவானார். அடு;த்த அதிகூடிய 14723வாக்குகளைப்பெற்றவர் த.கலையரசன்.
இம்முறை த.அ.கட்சி எந்த ஆசனத்தையும் பெறவில்லை.ஆதலால் வேட்பாளர்களது விருப்புவாக்குகள் வெளியாகவில்லை. எனினும் உத்தியோகப்பற்றற்றதகவலின்படி அதிகூடிய விருப்பு வாக்குகளை இம்முறை த.கலையரசனே பெற்றுள்ளதாகக்கூறப்படுகிறது. எனினும் கட்சி போதிய வாக்குகளைப்பெறாமையினால் ஆசனம் இழக்கப்பட்டிருந்தது.
அம்பாறை மாவட்டத்தில் இம்முறை தமிழ்ப்பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.அந்த இடத்திற்கு கலையரசனை நியமிக்க கட்சி தீர்மானித்தது. அதற்கமைவாக இந்நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
த.தே.கூட்டமைப்பு தேசியபட்டியல் எம்.பி.யாக கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் நாவிதன்வௌி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசனின் பெயரை ஞாயிறன்று ஊடகவியலாளர் மாநாட்டில் இ.த.அரசுக்கட்சியின் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் அறிவித்தார்.
இருப்பினும் பங்காளிக்கட்சிகளினதும் தமிழரசுக்கட்சிக்குள் சிலரதும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இவரது பெயர் தேர்தல் ஆணையகத்திற்கு அனுப்பப்பட்டு வர்த்தமானிப்பிரகடனமும் செய்யப்பட்டுள்ளது.
சம்மாந்துறைத் தொகுதி வரலாற்றில் முதல்தடவையாக தமிழர் ஒருவர் எம்.பியாக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.
அவர் இரண்டாவது தடவையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர்; அவர் அளித்த செவ்வியை வாசகர்களுக்காகத் தருகிறோம்.
வினா: தங்களின் பிறப்பிடம் பூர்வீகம் குடும்பம் பற்றி முதலில் சொல்லுங்கள்?
விடை: நான் அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கியபிரதேசமான நாவிதன்வெளிப்பிரதேசத்தின் இரண்டாம் பிரிவில்(15ஆம் கிராமம் -திருவானூர்) தவராசா ஸ்ரீரங்கம் தம்பதிகளுக்கு 1970.04.17ஆம் திகதி 7 சகோதரர்களுடன் பிறந்தேன். நான்தான் குடும்பத்தில் மூத்தவன். பின்னர் திருமணமாகி 5குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறேன்.
வினா: தங்கள் கல்வி பற்றிக்கூறுங்கள்?
விடை: நான் ஆரம்பக்கல்வியை துறைநீலாவணை மகாவித்தியாலயத்திலும் பின்னர் இடைநிலைக்கல்வியை திருவானூர் விவேகானந்தா மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வியை நாவிதன்வெளிஅன்னமலை மகா வித்தியாலயத்திலும் பயின்றேன். நாவிதன்வெளிஅன்னமலை மகாவித்தியாலயத்தின் முதல்முதலாக உயர்தரவகுப்பு ஆரம்பிக்கப்படவேளை முதல் அணியில் 5பேருடன் பயின்றேன்.
வினா: அரசியல் பிரவேசம் எவ்வாறமைந்தது?
விடை: பொதுவாகவே மக்களுக்கு சேவையாற்றும் ஆசை இருந்தது. அதன்பலனாக 2006 உள்ளுராட்சிதேர்தலில் போட்டியிட்டு உதவி தவிசாளராகத் தெரிவானேன். பின்னர் 2008இல் தவிசாளரானேன். 2012இல் கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவானேன். என்னுடன் எம்.இராஜேஸ்வரன் அண்ணனும் தெரிவாகியிருந்தார். பின்பு 2015 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது கூடிய வாக்குகளைப்பெற்றேன். மீண்டும் 2018 உள்ளுராட்சித்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தவிசாளரானேன்.பின்பு இம்முறை 2020பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமானளவு வாக்குளைப்பெற்றும் கட்சி தோல்வியைத்தழுவியது.
கேள்வி: தவிசாளராகவிருந்த தாங்கள் இம்முறைத் தேர்தலில் விரும்பி இறங்கவில்லையெனக்கூறப்படுகிறதே. உண்மையா?
பதில்: உண்மை. நான்விரும்பவில்லை. ஆனால் கட்சி கேட்டுக்கொண்டதற்கிணங்க போட்டியிட நேர்ந்தது.
கேள்வி: தாங்கள் சார்ந்த த.தே.கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் இம்முறை பாரியபின்னடைவைச் சந்தித்துள்ளதே. உங்கள் பேச்சாளர் சுமந்திரனும் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். அது தொடர்பாக என்ன கூற விளைகிறீர்கள்?
பதில்: அது உண்மை. அதற்கு பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். கட்சிமீதான வெறுப்பு. சிலஉறுப்பினர்கள்மீதான வெறுப்பு இப்படிப்பல. மக்கள் ஒரு வித்தியாசமான பாதையை விரும்புகிறார்கள்.
கேள்வி: அம்பாறையில் 1994ஆம் ஆண்டைப்போல இவ்வாண்டும் தமிழ்ப்பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் என்னவோ?
பதில்: அம்பாறை மாவட்டத்தில் 3ஆம் இனமான தமிழ்மக்கள் ஏனைய இரு இனங்களாலும் பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களது நீண்டகால குறுகியகால தேவைகள் நிறைவேற்றப்படாதது. கட்சிமீதுள்ள ஒருவித வெறுப்பு. மக்களுக்கான சேவைகளை செய்யாதது. அவர்களது கோரிக்கைகளை பூர்த்தி செய்யாதது. அரசின் முகவர்களின் சதி இப்படிப்பலவற்றைக்கூறலாம். இதனால் தமிழ்மக்கள் கட்சிக்கு மாறாக வாக்களித்தனர்.
கேள்வி. 2மாதகாலத்துள் களத்திலிறங்கிய கருணா அணியினருக்கு சுமார் 30ஆயிரம் வாக்குகள் விழக்காரணம் என்ன?
பதில்: த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரவேகம் அவர்களோடு ஒப்பிடுகையில் குறைவாக இருந்தது.அவர்களது பொய்யான பரப்புரைகள் மக்கள்மத்தியில் விதைக்கப்பட்டிருந்தது. தமிழ்மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிவந்த கல்முனை தமிழ்பிரதேசசெயலக தரமுயர்த்தல் பொத்துவில் கனகர்கிராமகாணிவிடுவிப்பு தொட்டாச்சுருங்கிவட்டைமீட்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படாமையும் கட்சிமீதான வெறுப்பிற்கு காரணமாகும்.இதனைமையமாகவைத்து சில தமிழ்இளைஞர்களும் புத்திஜீவிகளும் கருணாவுடன் இணைந்து செயற்பட்டமையும் எமது தேர்தல்பரப்புரையில் கருணாவுக்கெதிராக கூடுதலாக விமர்சித்தமையும் வாக்குகள் கூடக்காரணமாயமைந்தன எனலாம்.
கேள்வி: பிற மாவட்டத்திலிருந்து வந்து இங்கு கருணா வாக்கைப்பிரித்ததாகக்கூறுகிறீர் கள்? அப்படியெனின் 1994ஆம் ஆண்டில் மாவைசேனாதிராசா யாழ்ப்பாணமிருந்து வந்து வாக்கைப்பிரித்து அம்பாறை மாவட்ட பிரதிநிதித்துவத்தை அப்போது இழந்ததாகக்கருதமுடியாதா?
பதில்: அன்றைய சூழல் வேறுவிதமாகவிருந்தது. இதே கோபாலகிருஸ்ணன் அணியினர் தமிழர்மகாசபை என்றபோர்வையில் போட்டியிட்டதனால் வாக்குகள் பிரிந்தன. அதே அணியினர்தான் இன்று கருணாவுடன் வேறுமுகத்துடன் வந்தனர்.அதே பாணியில் பிரித்தனர்.
கேள்வி: அப்படியெனின் இம்முறை தமிழ்மக்கள் சுமார் 10ஆயிரம் பேரளவில் ஏனைய தேசிய சிங்கள கட்சிகளுக்கும் வாக்களித்துள்ளனரே. அவர்களை உங்களால் கவரமுடியாமல்போதேன்?
பதில்:உண்மைதான். ஆலையடிவேம்பில் மகளிர்அணியினர் தொலைபேசிச்சின்னத்திற்கும் வீணைக்குமாகப்பிரித்தனர். இன்னும் சிலர் பொக்கட்டை நிரப்ப பெரும்பான்மையின வேட்பாளர்களைக்கொண்டிறக்கி பிரித்தனர். சிலர் முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் வாக்களித்துள்ளனர். இவையெல்லாம் எமது வாக்குகளைக் குறைத்தன.
கேள்வி: த.தே.கூட்டமைப்பினர் தேர்தலுக்கு மட்டும் வந்து தலையைக்காட்டி வாக்குகளைப்பெற்றுவிட்டு பின்னர் அடுத்த தேர்தலுக்குத்தான் வருவதாக மக்கள் கூறுகின்றார்களே?
பதில்: அரசியலுக்கு இது புதிதல்ல. அதில் உண்மையில்லாமலுமில்லை. அனைத்தும் சேர்ந்துதான் இம்முறை மக்களது ஆணை அமைந்திருந்தது. என்னைப்பொறுத்தவரை நான் தேர்தலுக்காக மட்டும் அரசியல் செய்பவனல்ல.
கேள்வி: நீங்கள் பிறந்து வாழும் நாவிதன்வெளிப்பிரதேசம் தொடர்ந்து பின்தங்கிய பிரதேசமாகவே காட்சியளிக்கிறது. அதனை அபிவிருத்தி செய்ய ஏதாவது ஆக்கபூர்வமான திட்டங்கள் உள்ளதா?
பதில்: நான் தவிசாளராகவிருந்தகாலகட்டத்தில் பல வைலகளை இப்பகுதியில் செய்துள்ளேன். ஜ றோட் திட்டத்தின்கீழ்12கிலோமீற்றர் தூரவீதிகளை அமைத்துள்ளேன். குடிநீர்த்திட்டத்தை ஏற்படுத்தினேன். இருப்பினும் கிட்டங்கி ஏற்றுநிர்;பாசனத்திட்டத்தை முன்னெடுத்தால் இப்பிரதேச வயல்களில் இருபோகங்களையும் செய்யலாம். அதற்குமுன்னுரிமை கொடுக்கத்திட்டமிட்டுள்ளேன்.
கேள்வி; : மாவட்டத்தில் தமிழர் எதிர்நோக்கும் நீண்டகாலபிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பீர்களா?
பதில்: ஆம் தமிழ்மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிவரும் கல்முனை தமிழ்பிரதேசசெயலக தரமுயர்த்தல் பொத்துவில் கனகர்கிராமகாணிவிடுவிப்பு தொட்டாச்சுருங்கிவட்டைமீட்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படாமையும் கட்சிமீதான வெறுப்பிற்கு காரணமாகும்.அதனை நிறைவேற்ற என்னாலான சகலமுயற்சிகளையும் முன்னெடுப்பேன். ஏலவே இவ்விடயங்களில் கணிசமானளவு சம்பந்தப்பட்டவன் என்றவகையில் இவற்றைக்கையாள்தல் எளிது.
கேள்வி: தமிழ்மக்களைப்பொறுத்தவரை கல்முனை தமிழ்கல்வி வலயம் ஏற்படுத்தல் மற்றும் நிருவாகரீதியில் மல்வத்தை பிரதேசசபை கோமாரி பிரதேச சபை ஸ்தாபித்தல் மாவட்ட எல்லைகள் என அடுக்கக்கொண்டேபோகலாம். இவற்றுக்கு தாங்கள் கட்சிக்கு அப்பால் என்ன செய்யவிரும்பகிறீர்கள்?
பதில்:இவையும் கட்டாயம் நிறைவேற்றப்படவேண்டியவை. நான் மாகாணசபையிலிருக்கும்போது கையாண்ட விடயங்களே இவை. அண்ணன் இராஜேஸ்வரனும் இணைந்து இயங்கியவர்.துரதிஸ்டவசமாக நிறைவேற்றமுடியாமல் போய்வி;ட்டது. அவற்றைச்செய்வதற்கு முழுமுயற்சியையும் மேற்கொள்வேன். மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும்.
கேள்வி: இறுதியாக என்ன சொல்லவிளைகிறீர்கள்?
பதில்: தேர்தலின்போது எமது கட்சியை விட்டு சிலர் பிரிந்து செயற்பட்டனர். இன்னும் சிலர் தேசியக்கட்சிகளுடனும் கருணா அணியினருடன் இணைந்து செயற்பட்டனர். அவையெல்லாம் முடிந்துவிட்டது. அம்பாறை எமது தாயகம். அதை வெல்லவேண்டும். எனவே அவர்களை நான் ஒருபோதும் எதிரியாக பார்க்கப்போவதில்லை. அவாகள் எம்முடன் இணைந்து ஒற்றுமையாக ஒருகுடையின்கீழ் ஒரு அணியாக செயலாற்ற அழைக்கிறேன்.
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்