பிறப்பு, இறப்பு, திருமண பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள விசேட கருமபீடம்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவினால் வழங்கப்படுகின்ற பிறப்பு, இறப்பு, திருமண பதிவுகளை  தாமதமின்றி உடனுக்குடன் வழங்குவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்ட புதிய கருமபீடம் ஒன்றினை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா  (26) பிரதேச செயலகத்தில் வைத்து திறந்து வைத்தார்.
 
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரசவிக்கின்ற மற்றும் மரணமடைகின்றவர்களின் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகள் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலேயே பதிவு செய்யப்படுகின்றன. இம்மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலுமிருந்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாதாந்தம் பிரசவிக்கின்ற சுமார் 600 தொடக்கம் 1000 வரையான குழந்தைகளின் பிறப்புபு; பதிவுகள் இச்சசெயலகத்திலேயே ஆவணப்படுத்தப்படுகின்றது. இதனால் ஏனைய பிரதேச செயலகங்களை விட இச்செயலகத்தில் நாளொன்றுக்கு அதிகமான பிறப்புப் பதிவுகளும் ஏனைய இறப்பு மற்றும் விவாக பதிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுகின்றன. 
 
மேலும் பாடசாலைக்கு புதிய மாணவர்களை அனுமதித்தல், தேசிய மட்டப் பரீட்சைகளுக்கு விண்ணப்பித்தல் போன்ற பருவ காலங்களில் மிகவும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுகின்றன.
 
இவ்வாறான அதிகளவான விண்ணப்பங்கள் ஒரே நேரத்தில் கிடைப்பதனால் ஏற்படுகின்ற காலதாமதத்தினைக் குறைத்து உடனுக்குடன் பதிவுகளை வழங்கவதற்கு ஏற்றவகையில் இவ்விசேட கருமபீடம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ. வாசுதேவன் அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.
 
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ. வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி,; உதவி பிரதேச செயலாளர்களான திருமதி. லக்ஷன்யா பிரசாந்தன், ஜீ. அருணன், உதவி மாவட்ட பதிவாளர். எஸ். சுசிகரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். பிரணவசோதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. சுதர்சன், கணக்காளர் எஸ். புவனேஸ்வரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ரீ. சத்தியசீலன், மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Related posts