என்னைப்பொறுத்தவரை நான் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளேன்!

அம்பாறை மாவட்டத்தில் பாரிய சவால்களுக்கு மத்தியில் தேர்தலை குறுகியகாலத்துள் எதிர்கொண்டு கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தேன். நான் வெற்றிபெற்று பாராளுமன்றம் செல்லவில்லையென நீங்கள் கவலையடையலாம். ஆனால் என்னைப்பொறுத்தவரை நான் வெற்றிபெற்றுள்ளேன்.
 
இவ்வாறு தேர்தலுக்குப்பிறகு முதல் தடவையாக அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்செய்த கருணாஅம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
 
அவர் நேற்று(26)புதன்கிழமை மாலை கல்முனையில் சுமார் 4மணிநேரம் மக்களைச்சந்தித்து நன்றிகூறியதுடன் எதிர்காலசேவை பற்றியும் உரைத்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
 
எனது வெற்றிக்கு இரவுபகல் பாராமல் உழைத்த உள்ளுர் வெளியுர் புலம்பெயர் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நான் ஒருபோதும் உங்களை மறக்கமாட்டேன். கைவிடமாட்டேன். 5வருடத்திற்கொருதடவை வருபவனல்ல நான். நான் என்றும் உங்களோடு தோளோடு தோள்நிற்பேன்.
 
என்னைவிட குறைந்த விருப்புவாக்குகளைப் பெற்றுத்தான் சம்பந்தன் போன்றவர்கள் பாராளுமன்றம் சென்றுள்ளனர். வடக்கு கிழக்கு மக்கள் த.தே.கூட்டமைப்பை தூக்கிவீசி எறிந்துள்ளனர். இந்த மாற்றம் இன்னும் மாகாணசபைத்தேர்தலில் ஓங்கிஒலிக்கவுள்ளது.
 
இன்னுமின்னும் அவர்கள் பின்னால் சென்றால் இன்று இருப்பதும் இல்லாமல்போகும்.அவர்களுக்குள்ளே இடியப்பச்சிக்கல். அவர்களே ஒற்றுமைப்படாதபோது மக்களை எவ்வாறு அவர்கள் கோருவார்கள்?
 
எமது கட்சிக்கிளைகளை மாவட்டம்பூராக ஸ்தாபித்து எனக்குள்ள செல்வாக்கைப்யன்படுத்தி இளைஞர்யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளேன்.
 
ஓரிரு வாரங்களில் நல்லசெய்திகள் வரலாம். எனவே மக்கள் நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நமதே. என்றார்.

Related posts