மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 30 வருடகாலமாக இயங்கி வரும் மாவட்ட சிவில் சமூக அமைப்பின் 2020 ஆண்டுக்கான பொதுக்கூட்டம் சங்கத்தின் தலைவர் மாமாங்கராஜா தலைமையில் நேற்றுமாலை மட்டக்களப்பில் நடைபெற்றது .
மாவட்ட சிவில் சமூக அமைப்பின் உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் கடந்த கால செயல்பாடுகள் தொடர்பான ஒளிப்பதிவு காணொளி காட்சிப்படுத்தப்பட்டதுடன் தொடர்ந்து 2020 ஆண்டுக்கான நிர்வாக தெரிவும் இடம்பெற்றது .
இதன்போது கடந்த காலங்களில் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களாக செயல்பட்ட உறுப்பினர்கள் ஏகமனதாக மீண்டும் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர் .
நிர்வாக உறுப்பினர்கள் தெரிவின் பின் சங்க உறுப்பினர்களின் விமர்சன கருத்து பரிமாறல்கள் இடம்பெற்றன . இதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் சிவில் சமூக அமைப்பின் அரசாங்கத்திடம் முன்வைக்கப்படவுள்ள மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது .
இந்நிகழ்வில் மாவட்ட சிவில் சமூக அமைப்பின் போசகரான மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை , அருட்தந்தையர்கள் , பாடசாலை அதிபர்கள் , கல்வித்திணைக்கள அதிகாரிகள் , வர்த்தக சங்க உறுப்பினர்கள் , ,பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ,வைத்தியர்கள் என சிவில் சமூக அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்