ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு இம்முறையும் ரூபாய் 5000 வாழ்வாதார கொடுப்பனவு பெற்றுக் கொடுப்பதற்கு பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது.
தொற்றாளர்களையும் அவர்களுக்கு நெருக்கமானர்களையும் வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அந்த வீடுகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கும் நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய உணவுப்பொதி கிடைக்கப்பெறாத மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு இந்த ரூபாய் 5000 கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று (2020.11.02) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் அத்தியவசிய உணவு பொருட்களை விநியோகித்து மக்களின் வாழ்க்கையை உரிய முறையில் முன்னெடுத்து செல்வது தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
தொற்றாளர்களையும் அவர்களுக்கு நெருக்கமானவர்களையும் வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை முறையாக செயற்படுத்தி கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்ட பாதுகாப்பான நாட்டை உருவாக்க வேண்டுமாயின் அவர்களுக்கு அவசியமான அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டியதுடன், அந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்தும் பொறுப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தின் தலைமையில் பிரதேச சபை, பொலிஸ், பிரதேச சுகாதார சேவை அலுவலகம் மற்றும் கிராம குழுக்களுடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பசில் ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.
பிரதேச செயலக அலுவலக மட்டத்தில் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுவதுடன் கிராம குழுக்களின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் நிறைவுசெய்யப்படவுள்ளது.
நீர், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை மற்றும் அத்தியாவசிய வாழ்வாதார நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்து செல்வதுடன் தமது தொழில் பாதுகாப்பிற்கு சுகாதார வழிகாட்டல்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுமாறும் பசில் ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.
ஒரு நபருக்கு நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு செல்வதற்கு பதிலாக சுகாதாரத் துறையினரை தொலைபேசியில் அழைத்து மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதனை சுட்டிக்காட்டிய பசில் ராஜபக்ஷ அவர்கள், புதிய தனிமைப்படுத்தல் முறைமை குறித்து பிரதேச மட்டத்தில் தெளிவூட்டல்களை மேற்கொள்ளும் பணிகள் கிராம குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மக்களுக்கு அத்தியாவசியமான உணவு பொருட்களை பெற்று கொடுக்கும் செயற்பாட்டிற்காக பொருளதார மத்திய நிலையங்களை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய திறப்பதற்கான அவசியம் காணப்படுவதாகவும் இந்த கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது. ஆபத்தற்ற, சுகாதார பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு ஆபத்தற்ற பொருளாதார மத்திய நிலையம் என உறுதிசெய்யப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கான முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ அவர்கள்,
இன்று உலகின் பலம் மிக்க நாடுகள் மற்றும் எமது நாட்டை அண்மித்த நாடுகளும் கொவிட்-19 பாதிப்பிற்கு முகங்கொடுத்து இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு முடியாதுள்ளது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காரணமாக நாம் இச்செயற்பாட்டில் முன்னணியில் திகழ்கிறோம். இதில் தொடர்புபட்ட நபர்களுக்கு மேலதிகமாக மேலும் நபர்களை இந்த செயற்பாட்டில் இணைத்து கொள்வதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். மக்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் இந்த செயற்பாட்டை முன்னெடுத்து செல்லவே நாம் முயற்சிக்கிறோம்.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியில், தொற்றாளர்களை தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை பெற்றுக்கொடுப்பது அவசியமாகும். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக வீடுகளிலிருந்து வெளியேற தேவையேற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வது எமது கடமையாகும். அதற்காக திறைசேரியிலிருந்து நிதி பெற்றுக்கொடுக்கப்படும். கூட்டுறவு தலைவர்கள், உள்ளூராட்சி அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரதும் ஒத்துழைப்பு இதற்கு அவசியமாகும்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் தகுதியான குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்படும். கிராம குழுக்களின் உதவியுடன் நெருக்கடி ஏற்படாத வகையில் இந்த கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். தேவையான அளவு ஒதுக்கீடுகள் திறைசேரியிலிருந்து பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலும் ஒதுக்கீடுகள் தேவைப்படுமாயின் அந்த ஒதுக்கீடுகளை பெற்றுக் கொடுக்கவும் தயார். சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின் கீழ் அத்தியவசியமான வாழ்வாதார நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்தல் அவசியம். தொற்று நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்ற சந்தர்ப்பத்திலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தே காணப்பட்டது. கொவிட் தொற்று காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளின் மூலம் எமது நாட்டிற்கு கிடைக்கும் வருவாய் இல்லாது போயிற்று. எமக்கு இம்முறை கடன் தவணையை செலுத்திக் கொள்ள முடியாது போகும் என எதிர்த்தரப்பினர் எண்ணினர். எனினும், 4.2 பில்லியன் டொலர் கடன் தவணையை நாம் செலுத்தியுள்ளோம். 2020 ஒக்டோபர் மாதத்தில் நாம் ஏற்றுமதியின் மூலம் 900 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டியுள்ளோம்.
சுகாதார அதிகாரிகளின் சட்ட திட்டங்களுக்கு அமைய தொழிற்சாலைகளை நடத்தி செல்ல வேண்டியுள்ளது. நீர், எரிபொருள், மின்சாரம், எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை தொடர்ச்சியாக பெற்று கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். குறித்த நிறுவனங்களின் அனைத்து செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய உங்களது ஒத்துழைப்பை பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொருள் விநியோகத்தின்போது தேவையான பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகிக்குமாறு கூட்டுறவு சங்கங்களிடம் கேட்டு கொள்கிறோம். கடைகளை திறப்பதற்கான எதிர்பார்ப்பில்லை. கடந்த முறை போன்று இச்செயற்பாட்டை வெற்றிபெறச் செய்யுமாறு வேண்டுகிறோம். இம்முறை வரையறுக்கப்பட்ட அனுமதிகளை வழங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். மாவட்டங்களுக்கிடையே பயணங்களை மேற்கொள்வதை நாம் முழுமையாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் அனுமதியை பெற்று பயணங்களை மேற்கொள்ளுங்கள். தங்கள் விருப்பத்திற்கேற்ப மாவட்டங்களுக்கிடையே பயணிக்க வேண்டாம்.
கடந்த முறை போன்று முழுமையாக கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபடுவதே எமது நோக்கம். மீண்டும் அவ்வாறானதொரு நிலைக்கு நாட்டை கொண்டு செல்ல முயற்சிப்போம். அண்மையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் கொத்தணிகள் அனைத்தும் மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டிருப்பதால், அது மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பரவுவதை தடுப்பதற்கு எம்மாலேயே முடியும். பொருளாதாரம் வீழ்ச்சியடையாது பாதுகாத்து கொள்வதுடன், மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சியடையாது முன்னோக்கி சென்று கொவிட் தொற்றிலிருந்து விடுபட்ட நாட்டை உருவாக்குதற்கு அனைவரும் இணைந்து செயற்படுவோம்.
குறித்த சந்தர்ப்பத்தில் மேல் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், அமைச்சின் செயலாளர்கள், பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை தலைவர்கள் , மாகாண மற்றும் பிரதம செயலாளர்கள், பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் தகவல் திணைக்கள அதிகாரிகள், பலநோக்கு கூட்டுறவு சேவைகள் மற்றும் சதொச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடக பிரிவு