உறுப்பினர்களின் புதிய முன்மொழிவுகளை உள்வாங்குவதற்காகவே பாதீட்டு அமர்வு ஒத்திவைக்கப்பட்டது… (மட்டக்களப்பு மாநகர முதல்வர் – தி.சரவணபவன்

பாதீடு தயாரிப்பின் போது உறுப்பினர்களின் விடயங்கள் அவர்கள் மனதில் பட்டிருக்காது பாதீடு சபையில் முழுமையாகச் சமர்ப்பிக்கும் போது சிலவேளைகளில் விடுபட்ட விடயங்கள் தோணலாம் அதனடிப்படையில் அவர்களின் விடயங்கள் முக்கியப்படும் பட்சத்தில் அதனையும் உள்வாங்கி செயற்பட வேண்டியது நியாயமானதும், எமது பொறுப்புமாகும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

 
மட்க்களப்பு மாநகரசபையின் நேற்றைய தினம் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டத்திற்கான அமர்வு ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
மட்டக்களப்பு மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் மாநகரசபையின் அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்டது. பல உறுப்பினர்கள் அதனை வரவேற்றார்கள். எமது சில உறுப்பினர்கள் மேலும் பல புதிய முன்மொழிவுகளை முன்மொழிந்திருந்தார்கள். அந்த வகையில் அவற்றை உள்வாங்க வேண்டிய நிலைப்பாடு எங்களுக்கு இருந்த காரணத்தினால் இன்றைய தினம் பாதீட்டுக்கான வாக்கெடுப்பினை ஒத்திவைத்து பிறிதொரு தினத்தில் இதனை நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம்.
 
தன்னிச்சையான செயற்பாடு என்பது ஒவ்வொருவரின் பார்வையிலேயே இருக்கின்றது. மாநகரசபையின் கட்டளைச் சட்டத்தின் பிரகாரமே எமது செயற்பாடுகள் அனைத்தும் நடைபெறுகின்றது. நிலையியற்குழுக்களின் அங்கீகாரத்தின் பின்னர் சபையில் சமர்ப்பிக்கப்படும். சபையின் தீர்மானத்தின்படியே எமது செயற்பாடுகள் நடைபெறும் இதில் தன்னிச்சையாகச் செயற்படுவதென்பது இல்லை. மாநகர முதல்வர் உட்பட அனைவரின் கூட்டுப் பொறுப்புடனேயே செயற்பாடுகள் மேற்கொள்ளபபட்டு வருகின்றது. இதில் எனது தன்னிச்சையான செயற்பாடு என்ன இருக்கின்றது என்று தெரியவில்லை.
 
அனைத்து விடயங்களையும் உள்வாங்குகின்ற வகையில் பாதீடு தயாரிக்கப்பட்டிருந்தாலும், சில உறுப்பினர்களுக்கு பாதீடு தயாரிப்பின் போது அவர்களின் விடயங்கள் மனதில் பட்டிருக்காது பாதீடு சபையில் முழுமையாகச் சமர்ப்பிக்கும் போது சிலவேளைகளில் விடுபட்ட விடயங்கள் தோணலாம் அதனடிப்படையில் அவர்களின் விடயங்கள் முக்கியப்படும் பட்சத்தில் அதனையும் உள்வாங்கி செயற்பட வேண்டியது நியாயமானதும், எமது பொறுப்புமாகும். அந்த வகையில் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் உள்வாங்கி வரவுசெலவுத் திட்டத்தை மீண்டும் சமர்ப்பிக்க இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

Related posts