அமைச்சரவை அனுமதித்த கணக்காளரைக்கூட நியமிக்க இனவாதம் தடையா?ஊடகவியலாளர் மாநாட்டில் த.தே.கூட்டமைப்பு முக்கியஸ்தர் தவிசாளர் ஜெயசிறில்.

இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய கணக்காளரை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் அதனையும் இனவாதஅரசியல்வாதிகள் தடுக்கின்றார்கள். அரசோடு ஒட்டிக்கொண்டுள்ள தமிழ்அரசியல்வாதிகள் இதற்கான தீர்வைத்தருவார்களா?
 
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கேள்வியெழுப்பினார்.
 
கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு நியமிக்கப்பட்ட பதில்கணக்காளரின் நியமனம் ரத்துச்செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தவிசாளர் ஜெயசிறில் நேற்று(4) வெள்ளிக்கிழமை பிற்பகல் ஊடகவியலாளர் மாநாட்டை காரைதீவில் நடாத்தியிருந்தார்.
 
கல்முனைவடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என்று கல்முனையில் உண்ணாவிரதம் மேற்கொண்டபோது காரைதீவுசந்தியில் உண்ணாவிரதம் மேற்கொண்டவர் தவிசாளர் கே.ஜெயசிறில் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அவர் ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் கூறியதாவது:
40ஆயிரம் தமிழ்மக்கள் வாழும் 29கிராமசேவையாளர் பிரிவுகளைக்கொண்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் என்பது ஒட்டுமொத்த தமிழ்மக்களின் உரிமைப்பிரச்சினையாகும். அது தணியாத தாகமாகும்.
 
அங்கு கணக்காளர் ஒருவர் அரசஅதிபரால்  நேற்றுமுன்தினம் நியமிக்கப்பட்டார். அதன்பிற்பாடு கல்முனையின் இனவாத முஸ்லிம்அரசியல்வாதி அதனைத்தடுத்து நிறுத்தியதாக அறிகிறேன். இதற்கு அரசாங்கம் ஏன் இடமளிக்கவேண்டும்?
 
அதனை மையமாகவைத்து அரசியல் செய்தோர் பலர். அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் இன்றைய பிரதமரின் இணைப்பாளர் கருணா நாம் வென்றால் மறுகணம் தரமுயர்த்தல் நடைபெறும் இது எறுதி என்று பகிரங்கமாக கூறியிருந்தார்.ஜனாதிபதிதேர்தலின்போது கல்முனைக்கு வந்த பிரதமரும் உறுதியளித்தார். தமிழ்மக்கள் 7ஆயிரம் வாக்குகளை அளித்தார்கள். அதனை நம்பிய கல்முனை அப்பாவித்தமிழ்மக்கள் சுமார் 29ஆயிரம் வாக்குகளை வாரிவழங்கினார்கள். அது விழலுக்கு இறைத்த நீர் போலாகும் என்பதை அன்று அவர்கள் எண்ணியிருக்கவில்லை. இன்று தாம் முற்றாகவே ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்கள். இன்று அனைவரும் வேதனையுடன் வெந்துவெதும்புகிறார்கள்.
 
பாருங்கள் அங்கு கணக்காளரை நியமிக்கவேண்டும் என எமது கட்சித்தலைமைகள்தான் ஜனாதிபதி பிரதமரிடம் பேசி தீர்மானம் நிறைவேற்றியிருந்தார்கள்.பின்பு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. தமிழ்மக்களின் வாக்குகளைப்பெற்று கிழக்கின் மீட்பர்கள் என்றுவந்தவர்கள் இன்று வேடிக்கை பார்க்கிறார்கள்.
சரி தரமுயர்த்தாவிட்டாலும் பரவாயில்லை. கேவலம் கணக்காளரைக்கூட நியமிக்கமுடியாதவர்களாக இந்த அரசின்அடிவருடிகள் வாய்மூடி மௌனமாயிருக்கிறார்கள்.
 
கடைசி அதிகாரிகள் நியமித்ததைக்கூட தக்கவைத்திருக்கமுடியாத கையறுநிலையிலுள்ளனர்.பகிரங்கமாக கேட்கிறேன். இந்த விடயத்தில் தலையிட்டு அரசோடு பேசி தீர்வைப்பெற்றுத்தரவேண்டும். இன்றேல் ஒதுங்கிக்கொள்ளவேண்டும்.
 
தமிழ் முஸ்லிம் மக்களை பிரித்து அரசியல் குளிர் காய்ந்துவரும் அரசியல்வாதிகளுக்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது.
கல்முனை விவகாரம் தொடர்பாக நான் யாருடனும் விவாதம் செய்யத்தயாராயிருக்கிறேன். பகிரங்கமாக அழையுங்கள்.வருகிறேன். என்றார்

Related posts