ஒவ்வொரு தனிப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலேயே வரவு செலவு திட்டம் அமையும் – இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவிப்பு
எதிர்வரும் 2022 ஆண்டிற்கான வரவு செலவு திட்டமானது
ஒவ்வொரு தனிப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலேயே அமையப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் ஐந்தாயிரம் கிராமிய பாலங்களை அமைக்கும் “இதயங்களை ஒன்றிணைக்கும் ஊரின் பாலம்” வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பட்டிப்பளை அம்பிளாந்துறை பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு (04) திகதி சனிக்கிழமை இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கிராமத்தில் வாழும் மக்கள், தமது உற்பத்திப் பொருட்களை இலகுவில் நகர்ப்பகுதிகளுக்கு கொண்டுசென்று சந்தைப்படுத்தவும் மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையிலும் இந்தக் கிராமிய பாலங்கள் அமைக்கும் பணிகளை ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கத்தின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில், பிரதமரின் தலைமையில், இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாகமுனை பகுதியில் உள்ள பாலத்தின் புணரமைப்பு பணிகளே இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்படவுள்ள குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகளை
பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாலத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டிவைத்தார்.
இந்த நிகழ்வில், பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் நா.புஸ்பலிங்கம், பிரதேச சபை உறுப்பினர் வை.சந்திரமோகன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான த.மனோகரன், பா.மதனராஜ் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சனை பாரியதொரு பிரச்சனையாக இருந்து வந்துள்ளது இதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையில் 350 மில்லியன் ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கியுள்ளதாகவும் படுவாங்கரை மக்களின் நலன்கருதி நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதான காரியாலயம் ஒன்றினையும் கொக்கட்டிச்சோலையில் அமைப்பதற்குமான நிதிகளை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்தே இந்த அரசாஙகம் பயனித்துக்கொண்டிருக்கின்றது.
இவ்வாறான சூழலிலும் மக்களது போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில் அம்பிளாந்துரை மற்றும் மண்டூர் ஆகிய நீர்வழி பிரயாணத்திற்காக பயன்படுத்தப்படும் படகு பாதையானது பழுதடைந்துள்ளமையினால் புதிய இரண்டு பாதைகளை பெற்றுக்கொடுத்துள்ளேன் என்றார்.
அத்தோடு கண்ணுக்கு தெரியாத நோய் கிரிமிகளுடன் நாம் போராடிக்கொண்டு இருக்கின்றோம் எம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும், நாம் ஒரு அபிவிருத்தியடைந்துவரும் நாடு என்பதனால் மிகுந்த அவதானத்துடனே செயற்படவேண்டும்.
விவசாயதுறை சார்ந்து எமது மட்டக்களப்பு மாவட்டம் 4 ஆவது இடத்தில் இருக்கின்றது.
எமக்கு இருக்கும் பிரச்சனை எமது மாவட்டத்தில் அதிகளவு குளங்கள் இருந்தபோதிலும் அவை புனரமைக்கப்படாத நிலையிலேயே காணப்படுகின்றன. நாம் இந்த அரசாங்கத்தின் ஊடாக குளங்கள் பலவற்றை புணரமைப்பு செய்துவருகின்றோம். குளங்கள் அனைத்தும் புணரமைக்கப்பட்டால்
சிறந்த முறையில் நீர் முகாமைத்துவம் செய்ய முடியும், இதனூடாக 3 போகமும் வேளாண்மை செய்ய வாய்ப்பேற்படும். அவ்வாறான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் எமது மாவட்டம் விவசாயத்தில்
முதலிடத்தை அடையும், அதற்கான அனைத்துவிதமான வேலைத்திட்டங்களையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.
இதனைத் தொடர்ந்து அம்பிளாந்துறை படகுப் பாதையினை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் தாந்தாமலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு கிலோ மீற்றம் கொங்கிறீட் வீதியினையும் மக்கள் பாவனைக்காக திறந்துவைத்தார்.