கணக்காய்வுச் சட்டமூலம்: ‘அரசியல் தேவைக்கான திருத்தம்’

அமைச்சர்களின் தேவைகேற்ப கணக்காய்வுச் சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதெனத் தெரிவித்த ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி, கணக்காய்வாளர் நாயகத்திடமிருந்த அதிகாரங்கள் பல அமைச்சுகளின் செயலாளர்கள் வசமாகியுள்ளதெனவும் குற்றஞ்சாட்டினார்.

​பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் ​மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், “மூன்று வருடங்கள் காலம் தாழ்த்தப்பட்டு சமர்பிக்கப்பட்ட கணக்காய்வுச் சட்டமூலத்தால் கணக்காய்வாளர் நாயகத்திடம் இருந்த பல அதிகாரங்கள் அமைச்சுகளின் செயலாளர் வசமாகப்போகின்றது. தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் இதனால் முடங்கிப்​ போயுள்ளன.

கணக்காய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட மேற்படி சட்மூலத்தின் உள்ளீடுகள் பல அமைச்சரவைக் கூட்டங்களின் போது திருத்தம் செய்யப்பட்டு அரசாங்கத்தின் அமைச்சர்களுக்குத் தேவையான விதத்தில், இந்தச் சட்டமூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலம் சமர்பிக்கப்பட்ட போது அரச நிறுவனங்களில் அடிப்படை கணக்காய்வு செயற்பாடுகளை ஆராயும் அதிகாரம் கணக்காய்வு திணைக்களத்துக்கு இருப்பதாக குறிப்பிட்டிருந்த போதும் பின்னர் அந்த அதிகாரம் கணக்காய்வாளர் நாயகத்திடமிருந்த நீக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “கணக்காய்வாளர் நாயகத்துக்கு போலித் தரவுகள் வழங்குகின்றவர்களிடம் 1 இலட்சம் ரூபாய் தண்டப்படணமாக அறவிடப்படும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், சட்டமூலத்தில் 50 ஆயிரம் ரூபாயே அதிகபட்ச தண்டப்படணமாக அறவிடப்படுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் 16 திருத்தங்களை ஜே.வி.பி முன்வைத்த போது அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, மேற்படி சட்டமூலம் அரசியல் தேவைக்காக திருத்தம் செய்யப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதியும் பிரதமருமே பொறுப்புக்கூற வேண்டும்” என்றார்.

Related posts