பட்டிருப்பில் இணைந்த கணித மாணவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு நீதியான, பக்கச்சார்பற்ற நடுநிலையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும்… (இலங்கை ஆசிரியர் சங்கம் விலியுறுத்தல்)

மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் ஒரு சிரேஸ்ட தரத்தில் இருக்கின்ற கல்விப் பணிப்பாளர்கள் இருக்கும் போது கனிஸ்ட தரத்தில் இருக்கின்ற கல்விப் பணிப்பாளரிடம் பரீட்சை மேற்பபார்வையார்களை நியமிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இதனாலேயே பட்டிருப்பில் இணைந்த கணிதம் பரீட்சையின் போது குழறுபடி ஏற்பட்டது. மாணவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு நீதியான, பக்கச்சார்பற்ற நடுநிலையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்தார்.
 
இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கைiயில்
 
அண்மையில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் இணைந்த கணிதம் உயர்தரப் பரீட்சையின் போது இடம்பெற்ற குழறுபடி தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் அன்றைய தினம் பிரதி பரீட்சை ஆணையாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அச்சமயம் அப்பரீட்சையில் கடமையாற்றியவர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக நிலைமையை எமது பொதுச் செயலாளரிடம் விளக்கியிருந்தார்.
 
இருந்தும் இந்தப் பரீட்சை தொடர்பில் மாணவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு நீதியான, பக்கச்சார்பற்ற நடுநிலையான விசாரணையை இலங்கை ஆசிரியர் சங்கம் மீண்டும் வலியுறுத்துகின்றது.
 
அண்மைக்காலமாக பட்டிருப்பு கல்வி வலயத்தினுடைய கல்வி வளர்ச்சி ஒரு துரிதமான நிலையில் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. கடந்த முறை இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் மருந்துவத் துறையில் பட்டிருப்பு மகா வித்தியாலய மாணவன் தெரிவு செய்யப்பட்டிருப்பதோடு அதேவேளை கல்லாறில் 26வது நிலையில் பொறியியல் பீடத்திற்கு மாணவியொருவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார். மேலும் 52 மாணவர்கள்; இணைந்த கணிதம் பாடத்திற்குத் தோற்றிய போது அதில் 50 வீதமான மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்திருந்தார்கள். மற்றும் ஏனைய பாடங்கள் தொடர்பிலும் பட்டிருப்பின் கல்வி வளர்ச்சி மிக உயர்வாகக் காணப்பட்டதோடு 50 வீதமான மாணவர்கள் சகல துறைகளிலும் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்று வலயத்திற்கு பெருமையைச் சேர்த்திருக்கின்றார்கள். அத்துடன் கடந்த உயர்தரத்தில் வர்த்தகத்துறையில் மாவட்டத்தின் ஐந்து வலயங்களிலும் முதலாவது இடத்தை பட்டிருப்பு வலயம் பெற்றிருக்கின்றது.
 
இவ்வாறு இருக்கையில் மேற்குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்றருக்கின்றது. அதற்கு பரீட்சை மேற்பார்வையாளர்களைத் தற்காலிகமாக இடைநிறுத்தியிருக்கின்றபோதும், இந்த மேற்பார்வையாளர்களை யார் நியமித்தது என்பது தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இதற்கு பரீட்சைகள் ஆணையாளர் பொறுப்புக் கூற வேண்டும்.
 
ஏனெனில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து பெரும்பாலான அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த வருடம் கடமைப் பொறுப்புகள் கையளிக்கப்படவில்லை. பரீட்சை தொடர்பில் நீண்ட காலம் அனுபவத்துடன் மேற்பார்வையாளர்களாகக் கடமையாற்றியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு புதிதாக நியமனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்.
 
மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் ஒரு சிரேஸ்ட தரத்தில் இருக்கின்ற கல்விப் பணிப்பாளர்கள் இருக்கும் போது கனிஸ்ட தரத்தில் இருக்கின்ற கல்விப் பணிப்பாளரிடம் பரீட்சை மேற்பபார்வையாளர்களை நியமிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
 
அதேநேரம் பரீட்சை மேற்பார்வை கடமைகளில் முழு நேரமாக ஈடுபட வேண்டியவர்கள் நேற்றைய தினம் பரீட்சை பகுப்பாய்வு என்ற சொல்லி மட்டக்களப்பு கல்வி வலயத்தில் நடத்துகின்றார்கள். இது தொடர்பில் நேரடியாக மாகாணக் கல்விப் பணிப்பாளரிடமும், பிரதிப் பரீட்சை ஆணையாளரிடமும் தெரிவித்திருந்தோம். அவர் முழு நேரமும் பரீட்சைக் கடமையில் ஈடபட வேண்டியவர் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளைப் பகுப்பாய்வு செய்யும் கடமையில் எவ்வாறு ஈடுபட முடியும்.
 
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்வது மட்டுமல்லாமல் இந்த மாணவர்களுக்குப் பொருத்தமான நடவடிக்கையை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொள்ள வேண்டும்.
 
இது தொடர்பில் நாங்கள் பரீட்சைகள் பிரதி ஆணையாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், கல்விச் செயலாளர் ஆகியோரிடம் தெரிவித்திருக்கின்றோம் மேலும் மாகாண ஆளுநருடனும் கலந்துரையாடவுள்ளோம் என்று தெரிவித்தார்.
 
 

Related posts