நாட்டில் இருக்கின்ற நிருவாக நடைமுறைக்கு மாறாக கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் நடைமுறை மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றைய பொருளாதார நிலைமைகளை விட மிக மோசமானதொரு மாபியா அச்சம் அம்பாறை மாவட்டத்திலே கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை மையமாக வைத்து எல்லை மாற்றத்திற்காக உருவாகியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலைஅரசன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வில் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் தற்போதுள்ள பொருளாதார ரீதியான பின்னடைவுக்கு மின்சாரம் போன்ற காரணிகளும் பாரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளன. இந்த நாட்டு மக்கள் வாழ முடியாது பொருளாதார சுமையைத் தாங்க முடியாது தத்தளிக்கின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது. எமது நாட்டில் சீரான பொருளாதாரக் கொள்கை இல்லாமையே இவற்றுக்கான காரணமாக இருக்கன்றது.
எனினும் இங்கு உரையாற்றிய பல அமைச்சர்கள் விவசாயம் உட்பட ஏனைய துறைகள் முன்னேறியிருப்பதாகத் தெரிவித்திருந்தார்கள். உண்மையிலேயே இந்த விவசாயத் துறையை முன்னேற்றுவதற்கு இந்த அரசாங்கம் எவ்வகையான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது என்பது கேள்வியாகவே இருக்கின்றது. மாறாக இந்த நாட்டைச் சீரழிப்பதற்கான நடவடிக்கைகளைத் தான் நீங்கள் முன்னெடுத்தீர்களே தவிர விவசாயத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இன்று விவசாயிகள் தங்களுடைய விவசாயத்தை எவ்வாறு அறுவடை செய்யலாம் அதற்கான உரத்தை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனையோடு தான் இருக்கின்றார்கள்.
இன்றைய பொருளாதார நிலைமைகளை விட மிக மோசமானதொரு மாபியா அச்சம் அம்பாறை மாவட்டத்திலே கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. கல்முனை வடக்குப் பிரதேசத்தின் எல்லைகளை மாற்றியமைக்கும் பாரியதொரு நிருவாக மோசடி கல்னை தெற்குப் பிரதேச செயலக நிருவாகிகளாலும், நிலஅளவைத் திணைக்களத்தினாலும், சில அரசியல்வாதிகளாலும், முஸ்லீம் போரம் என்று சொல்லப்படுகின்ற அமைப்பினாலும் மேற்கொள்ளப்பட்டு இரு சமூகங்களையும் குழப்புகின்ற நோக்கத்திலான நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக கல்முனை வடக்குப் பிரதேச செயலகமென்பது நீண்டகாலமாக இயங்கி வருகின்ற பிரதேச செயலகமாகும். அங்கு 29 கிராம சேவையாளர் பிரிவுகள் இருக்கின்றன. இந்தக் கிராம சேவையாளர் பிரிவுகள் அனைத்தும் பழம்பெரும் கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசங்களாகும். அவ்வாறிருக்கின்ற அந்த எல்லைகளை கல்முனை தெற்குப் பிரதேச செயலகத்தேர்டு நிலஅளவை செய்து கல்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட கிராம சேவையாளர் பிரிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
இவ்வாறானதொரு மோசடி எமது கல்முனை வடக்குப் பிரதேசத்திலே தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றது. கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தில் நிருவாக ரீதியாக இருக்கின்ற உத்தியோகத்தர்களுக்குத் தெரியாமல் இந்த விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. உண்மையிலே இது பாரிய மோசடியாகும்.
கல்முனை வடக்கிலே பழம்பெரும் கிராமங்களாக இருக்கின்ற சேனைக்குடியிருப்பு 1ஏ,1பி, நற்பட்டிமுனை 1,2, பாண்டிருப்பு 1,1ஏ,1சி, கல்முனை 3, பெரியநீலாவணை 2 போன்ற கிராமங்களின் எல்லைகளை மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது இப்போது அது கல்முனை தெற்குப் பிரதேச செயலகத்தோடு இணைந்ததாக வரைபடத்தில் நிலஅளவைத் திணைக்களம் காட்டியிருக்கின்றது.
அது மாத்திரமல்லாமல் பழம்பெரும் கிராமமான பாண்டிருப்பின் செட்டியார் வீதி, அல்மினல் வீதியாகவும், நீண்டகாலமாக இருக்கும் தரவைப் பிள்ளையார் கோவில் வீதி கடற்கரைப்பள்ளி வீதியாகவும், கல்முனை 1சி தமிழ் மக்களும் சிங்கள மக்களும் வாழ்ந்த பிரதேசம் தற்போது இஸ்லாமாபாத் எனவும் சட்ட விரோதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவை கல்முனையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற விடயமாக இருக்கின்றன.
நாட்டில் இருக்கின்ற நிருவாக நடைமுறைக்கு மாறாக கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் நடைமுறை மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு இவ் உயரிய சபையினூடாக ஒரு தீர்வினைப் பெற்றுத தர வேண்டும்.
அது மட்டுமல்லாது, கல்முனை காணிப் பதிவகத்தில் கல்முனை வடக்குப் பிரதேச காணிப் பதிவேட்டினை இரத்துச் செய்து பதிவாளர் நாயகத்தினால் கட்டளையொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல வடங்களாக இயங்கி வந்திருக்கின்ற காணி நிருவாக நடைமுறையினை இரத்துச் செய்து கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை முடக்கும் நோக்கிலேயே இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் 29 கிராம சேவகர் பிரிவுகளையும், தெற்குப் பிரதேச செயலகம் 29 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி செயற்படுத்தப்பட்டு வருகின்ற நிiமையை மாற்றியமைப்பற்கான செயற்பாடுகளாகவே இவை முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான விடயங்களில் அங்குள்ள பொதுமக்களும் எங்கள் அரசியல் பிரதிநிகளும் தலையிடுகின்ற போது எங்கள் பிரதிநிதிகளைத் திட்டமிட்டு துன்புறுத்துகின்ற, அச்சறுத்துகின்ற நிலைமை காணப்படுகின்றது. குறிப்பாக கல்முனை மாநகரசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருக்கின்ற சாமூவேல் சந்திரசேகரம் ராஜன் அவர்கள் இனந்தெரியாதவர்களாலும் சிவில் உடையில் வந்த புலனாய்வாளர்கள் என்று சொல்லப்படுகின்றவர்களாலும் அச்சுறுத்தப்படுகின்றார். இவ்வாறான செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். மக்களுக்காகச் செயற்படும் எமது உறுப்பினர்களை அச்சுறுத்துவதன் மூலம் எதனையும் சாதித்து விட முடியாது என்று தெரிவித்தார்.