யாழ்- கதிர்காமம் பாதயாத்திரை நேற்று முல்லைத்தீவை அடைந்தது.இன்று முள்ளிவாய்க்காலில்..

 
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த யாழ்- கதிர்காமம் பாதயாத்திரை, நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசித்தது.
 
கடந்த 04 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பித்த இப் பாதயாத்திரை 08 ஆவது நாள் இன்று (11) சனிக்கிழமை, முள்ளிவாய்க்கால்  சித்திவிநாயகர் ஆலயத்தை அடைந்து, இன்றிரவு வட்டவாகல் சப்தகன்னிநகர் ஆலயத்தில் தங்கும்.
 
7 ஆவது நாளான நேற்று (10) வெள்ளிக்கிழமை ,வள்ளிபுனம் முருகன் ஆலயத்தை அடைந்து புதுக்குடியிருப்பு சுப்பிரமணியம் ஆலயத்தில் தங்கியது.
 
நாளை 12 ஞாயிற்றுக்கிழமை, வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தை சென்றடையும் பாதயாத்திரை குழுவினர் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கு நிறைவு பெறும் வரை 3 தினங்கள் தங்கியிருப்பார்கள்.
 
14ஆம் திகதி மீண்டும் பாதயாத்திரை ஊற்றங்கரை நோக்கி நகரும் என பாதயாத்திரை பொறுப்பாளர்களான எஸ்.ஜெயராஜா எஸ்.நந்தபாலா ஆகியோர் முல்லைத்தீவிலிருந்து தெரிவித்தனர்.
 
“என்னதான் பொருளாதார நெருக்கடி இருந்தாலும் வழிநெடுகிலும் முருகன் அருளால்  ஆலயங்களும் மக்களும் தாராளமாக உணவளித்து உதவி செய்தனர் . எவ்வித விக்கினமும் இல்லாமல் சந்தோஷமாக பாதயாத்திரையில் வருகிறோம்.” என இவர்கள் மேலும் தெரிவித்தனர்

Related posts