ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான வழக்கு இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பதில் நீதவான் ரத்னா கமகே முன்னிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்றது.
இதன்போது லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு விசாரணைகளின் அறிக்கைகள் மன்றில் முன்வைக்கப்பட்டன.
பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் குறித்த அறிக்கைகளின் பிரதிகளை வழங்குமாறு மன்றில் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிணங்க நீதிமன்றம் இதற்கான அனுமதி வழங்கியதுடன் வழக்கை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான விசாரணைகள் குறித்த தகவல்களை வௌியிடாமை தொடர்பான குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் திஸ்ஸ சுகதபால உள்ளிட்டோர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.