நான் இந்த அரங்கை அடையும்போது பூ மரத்திலிருந்து பூக்கள் விழுவதை அவதானித்தேன். எனவே அது நல்ல சகுனத்தின் அடையாளமாகும். ஆகவே எமக்கு தற்போது அரசியலில் நல்ல சகுனம் ஆரம்பித்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். எனவே ஆட்சியைக் கைப்பற்றும் வரையில் நாம் ஓயப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த “ஜனபலசேனா” மக்கள் எழுச்சிப் பேரணி நேற்று கொழும்பில் நடைபெற்றதுடன் பேரணியைத் தொடர்ந்து விகாரமகாதேவி பூங்காவிலுள்ள உள்ளக அரங்கில் கூட்டமும் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடு தற்போது மிகவும் பயங்கர நிலையை அடைந்து வருகிறது. மக்களால் தமது வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாது திணறுகின்றனர். பொருட்களின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. மூன்று நேரம் உணவு உண்டு வாழ்ந்த சமூகம் தற்போது ஒரு வேளை உணவுடன் கட்டுப்படுத்திக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நிலைக்கு தாய்மார்களும் பழக்கப்பட்டு விட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இந்த நிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரே ஏற்படுத்தியுள்ளனர். என்றுமில்லாதவாறு வரிகளை அதிகரிக்கின்றனர். தேர்தல் காலத்தில் இளம் சமூகத்தினர் மழைக்கு நனையாது மோட்டார் கார்களில் பயணிக்கும் கனவை அரசாங்கம் ஏற்படுத்தியது. ஆனால் தற்போது என்ன நடைபெற்றுள்ளது? மோட்டார் காருக்கு வரி அதிகரித்தமை குறித்து ஆச்சரியப்படத் தேவையில்லை. ஏனெனில் உண்டியலுக்கு வரி அறவிடும் அரசாங்கம் மோட்டார் காருக்கு வரி அறவிடுவதில் ஆச்சரியம் இல்லை.
நல்லாட்சி அரசாங்கம் மக்கள் பற்றி கவனம் செலுத்தாது தம்மை பற்றி மாத்திரம் அக்கறை கொண்டுள்ளனர். ஆட்சியாளர்கள் தமக்கு ஏற்றவகையில் அரசியலமைப்பைப் பயன்படுத்துவதற்கு எத்தனிக்கின்றனர். மேலும் கடந்த காலங்களில் எம்மை திருடர்கள் எனக் குறிப்பிட்டு வந்தனர். ஆனால் தற்போது யார் திருடர்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.
அரசாங்கம் எவ்விதமான அபிவிருத்திகளையும் மேற்கொள்வதாக இல்லை. மாறாக தேசிய வளங்களை விற்பனை செய்து வருகிறது. நாட்டிலுள்ள பெருமளவு காணியையும் விற்பனை செய்து விட்டது. ஆகவே எதிர்கால எமது சந்ததியினருக்கு நாட்டில் எதுவும் இல்லாது போய்விடும் அபாயம் உள்ளது. அரசாங்கம் விற்பனை செய்யும் வளங்களை கொள்வனவு செய்வதற்கு ஒரு தரப்பினர் உள்ளனர்.
எனவே அந்த சர்வதேச தரப்பினருக்கு நாம் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அதனைப் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது நல்லாட்சி அரசாங்கம் விற்பனை செய்யும் வளங்களை கொள்வனவு செய்ய வேண்டாம். ஏனெனில் நாம் ஆட்சிக்கு வந்ததுடன் அது தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துவோம். அதனை எந்தவொரு நாடும் மறந்துவிட வேண்டாம்.
நாட்டிலுள்ள சகல வர்க்கத்திற்குச் சொந்தமான குறித்த வளங்களை விற்பனை செய்யும் எந்தவொரு அதிகாரமும் அரசாங்கத்திற்கு இல்லை. அதற்கான ஆணையை மக்கள் வழங்கவுமில்லை. அவ்வாறு விற்பனை மூலம் அரசாங்கத்திலுள்ளவர்கள் தரகுப் பணம் பெறுகின்றனர். அதனால் அரசாங்கத்திற்குள்ளேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் விரல் நீட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை திருடர் என முதலில் குறிப்பிட்டவர்கள் நாம் இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முதலில் பிரதமரை திருடர் எனக் குறிப்பிட்டார். நாட்டில் நிர்வாகம் இல்லை, அராஜக ஆட்சியே முன்னெடுக்கப்படுகிறது. மத்திய வங்கி மோசடியுடன் தொடர்புபட்ட அர்ஜுன மகேந்திரன் வெளிநாட்டில் உள்ளார். அவரைக்கொண்டு வரமுடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. எனினும் அவரின் பிள்ளைகளின் திருமணத்தில் நாட்டு தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
மோடிகளை அத்தரப்பினர் மறந்துள்ளதுடன் எம்மையும் மறக்கச் சொல்கின்றனர். அது மாத்திரமன்றி எனது பெயருக்கு அரசாங்கத்திலுள்ளவர்களுக்கு பெரும் அச்சம் உள்ளது. காலி மைதானத்தில் கட்டிடம் ஒன்றிற்கு எனது பெயர் சூட்டப்பட்டுள்ளதனால் அம்மைதானத்தை அகற்றுவதற்கும் எதிர்பார்க்கின்றனர். நீதிமன்றத்தைப் பயன்படுத்தி எம்மை அடக்குவதற்கு எதிர்பார்க்கின்றனர். அதற்காகவே விசேட நீதிமன்றை அமைத்துள்ளனர். அதன் மூலம் வழக்குகள் அமைச்சர்களின் காரியாலயங்களில் தீர்மானிக்கப்படுகிறது. அங்கு சட்டமா அதிபரை அழைத்தும் தீர்மானிக்கின்றனர். சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கின்றனர். எனவே நீதிமன்றங்களை நிர்வகிக்கும் ஏகாதிபத்திய நிலைக்கு அரசாங்கம் சென்று கொண்டிருக்கிறது. இதுதானா நீதிமன்ற சுயாதீனம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
மக்கள் விடுதலை முன்னணி உட்பட அரச சார்பற்ற நிறுவனங்கள் இது குறித்து தற்போது பேசுவதில்லை. இன்னும் நாம்தான் ஆட்சி நடத்துவதாக மக்கள் விடுதலை முன்னணி நினைத்துக்கொண்டிருக்கிறது.அத்தரப்பு அரசாங்கத்தை விமர்சிக்காது எம்மையே விமர்சிக்கின்றனர். எனினும் தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது. ஆகவே அரசாங்கம் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களினால் நாட்டையும் மக்களையும் சீரழிக்கின்றனர்.
கடந்த காலங்களில் மக்களின் கைகளில் பணம் இருந்தது. ஆனால் தற்போது மக்களின் கைகளில் பணம் இல்லை. போதைப்பொருள் வர்த்தகர்களின் கைகளிலேயே பணம் புழங்குகிறது. போதைப்பொருள் வர்த்தகத்தின் பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளனர். பாடசாலைகளுக்குள்ளும் போதைப்பொருள் சென்றுள்ளது.
நாட்டில் குற்றச்செயல் அதிகரித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிடுகிறார். எனினும் நாட்டில் குற்றச்செயல் குறைவடைந்துள்ளதாக பிரதமர் குறிப்பிடுகிறார். இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இது மிகவும் பயங்கரமானதாகும்.போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் விசாரணை செய்யும் அதிகாரம் இராணுவத்திற்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றனர்.
எனவே அதன் பின்னர் நாட்டில் கொலைச் சம்பவம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டு அது குறித்தும் இராணுவத்திடம் பொறுப் புக் கொடுப்பர். பின்னர் குடும்பப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டு அதனை விசாரணை செய்வதற்கும் இராணு வத்திடம் வழங்குவர். இதுதான் இராணுவ மயமாக்கலின் முதல் கட்ட நடவடிக்கைக ளாகும். இச்செயற்பாட்டுக்கு பாராளுமன் றத்திலும் அனுமதி பெற்று சட்டமாக்கிக் கொள்வதற்கு எதிர்பார்க்கின்றனர். எனவே இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டும்.
ஆகையினால்தான் நாம் இன்று இந்த பேரணியைஆரம்பித்துள்ளோம். இப் பேரணி இத்துடன் நிறைவடையப் போவ தில்லை. நல்லாட்சி அரசாங்கத்தை துரத் தும் வரையில், அரசாங்கம் பதவி விலகும் வரையில் இப்போராட்டத்தைத் கைவிடப் போவதில்லை. அரசாங்கம் பதவி விலகு வதற்கான காலம் தற்போது வந்துள்ளது. ஆகவே பதவி விலக வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.