தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய சந்தர்ப்பத்தைக் கோரிப் போராடி வருகின்ற நிலையில், தமிழர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் நிராகரிக்கின்ற ஒருவராக மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றாரென, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாறை, தம்பட்டை மகா வித்தியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழர் பிரதேசங்களில், பல்வேறு அபிவிருத்தி வேலைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுத்து வரும் நிலையில், தமிழர்களுக்காக உரிமை ரீதியான போராட்டங்களையும் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
புதிய அரசியல் வரைவு ஒன்றைக் கொண்டு வந்து, அதனுடாக தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வுவைப் பெற்றுக் கொள்வதற்காக முனைப்பக்களை காட்டி நிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், இச்சந்தர்ப்பத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியல் வரைவு, இந்நாட்டுக்குத் தேவையில்லை என்ற நிலையில் தமது கருத்துகளைத் தெரிவித்துள்ளார் எனவும் இவர் காலம், காலமாக தமிழ் மக்களைத் தொடர்ந்தம் ஏமாற்றி வருகின்றார் எனவும், கோடீஸ்வரன் எம்.பி குற்றஞ்சாட்டினார்.