வாழைச்சேனையில் வீடுபுகுந்து திருடியவர்களில் ஒருவர் கைது

வீட்டைக் கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெரா உள்ளிட்ட அதன் உபகரணங்களை அகற்றியதோடு பணம் மற்றும் தங்க நகைகள் என்பனவற்றை வீட்டிலிருந்து திருடிச்சென்ற சந்தேக நபர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி எஸ்.ஏ. பண்டார மற்றும் பொலிஸ் சிரேஷ்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஈசாலெப்பை பதூர்தீன் தலைமையில் நடவடிக்கையில் இறங்கிய பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரைக் கைதுசெய்தனர்.

தகவலொன்றில் அடிப்படையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது வாழைச்சேனையில் வைத்து 23 வயதான இளைஞனொருவன் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவத்துடன் தொடர்புடைய 26 வயதான இன்னுமொரு சந்தே நபர் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சந்தேகநபர் கைதுசெய்யப்படும்போது அவரிடமிருந்து சம்பவம் நடந்த வீட்டில் திருடப்பட்ட சி.சி.ரி.வி. கமெராவின் சில உதிரிப்பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் அவ்வீட்டில் திருடப்பட்டதாக முறையிடப்பட்ட சுமார் 60 ஆயிரம் ரூபாய் பணம் குறித்தும் தங்க ஆபரணங்கள் குறித்தும் பொலிஸார் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருடப்பட்ட சி.சி.ரி.வி. கமெராவும் அதன் இணைப் பாகங்களும் சுமார் 62 ஆயிரம் ரூபாய் பெறுமதியானது என முறையிடப்பட்டிருந்தது. அத்துடன் 2 பவுண் தங்க நகைகளும் 60 ஆயிரம் ரூபாய் பணமும் திருடப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts