தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த தமிழ் மக்களை ஒருபோதும் ஏமாற்றமாட்டோம்

தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் என்ற வகையில் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டுமென்ற அபிலாசையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் வாக்களித்த தமிழ் மக்களை நாங்கள் ஒருபோதும் ஏமாற்றமாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் கம்உதாவ செமட்ட செவண திட்டத்தின் மூலம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாசிவந்தீவு பகுதியில் 25 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – கடந்த ஒக்டோபர் 26 புரட்சியின் போது ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே நீதிமன்றம் சென்றோம். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை நாட்டை ஆளும் ஜனாதிபதியும் இதற்கு முன்ப இரண்டு தடவை ஆட்சிசெய்த ஜனாதிபதியும் மீறியுள்ளார்கள் என சுட்டிக்காட்டப்பட்டது. அந்த காலப்பகுதியில் ராஜபக்ஷ குடும்பத்தினர் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கும் நடவடிக்கையில்கூட இறங்கியிருந்தார்கள்.

2009ல் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக வெளிநாடுகளிலிருந்து வந்த நிதியைப் பணன்படுத்தி அப்போதிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென்பகுதியையே அதிகமாக அபிவிருத்தி செய்தார். அந்த காலப் பகுதியில் தொண்டு நிறுவனங்கள் பல வீடுகளை எமது மக்களுக்கு அமைத்துக் கொடுத்தன அரசாங்களத்தினால் கண்துடைப்புக்கானக ஒருசில வீடுகள் அமைக்கப்பட்டன.

தற்போதைய வீடமைப்பு நிருமானத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாஸ ஏழை மக்கள் முதல் நடுத்தரவர்க மக்கள் வரை வீடமைப்புத் திட்டங்களை வழங்கி வருகிறார். வருகின்ற வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கில் வீடமைப்புத் திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அனுசரணை ஆலோசனைகளையும் பெறாமல் சிங்கள பேரினவாத கொள்கை அடிப்படையில் அரசியில்யாப்பு தயாரிக்கப்பட்டது. தற்போது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பினை உருவாக்கத்திற்கான குழுவில் இணைந்து செயற்படுகிறது.

தயாரிக்கப்படும் புதிய அரசியலமைப்பபை எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கொண்டுவர விடமாட்டேன் என தென்பகுதி மக்களுக்கு கூறிக்கொண்டிருக்கிறார்.

புதிய அரசியலமைப்பில் அதிகாரப் பரவலாக்கம் குறிப்பிடப்பட்டுள்ளதனால்; ‘இது சமஷ்டியைக் குறிக்கிறது தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்படப்போகிறது” என மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குழுவினரும் தீவிர பிரசாரம் செய்கிறார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும்போது ‘அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று 13 பிளஸ் தீர்வு வழங்கப்படும் என பிரசாரம் செய்திருந்தார். அந்தவேளையில் அவர் உருவாக்கிய சர்வ கட்சிக்குழு அறிக்கையிலும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவரே இன்று மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாது, அதிகாரங்கள் பரவலாக்கப்படக் கூடாது,

அதிகாரப்பரவலாக்கம் நாடு பிளவுபடுவதற்கு வழியமைக்கும் என மேடைகளில் பிரசாரம் செய்கின்றார்.

அதிகாரம் மத்தியிலே குவிந்திருக்க முடியாது பரவலாக்கப்பட வேண்டும் காணி பொலிஸ் நிதி பெறும் அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருந்தால் மாகாணசபைகள் எவ்வாறு அதிகாரத்துடன் செயற்படுவது. மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது உள்ளுராட்சி சபைகளும் அதிகாரம் பெறும்.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக உள்ளது மாகாண சபையிடம் கேட்டால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறுகிறார்கள். மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் அவர்களது பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்  என்றார்.

Related posts