கல்லடிப் பாலத்தில் உல்லாசப் பயணத்துறை சார்ந்த கடைகளை அமைத்து கொடுப்பதன் ஊடாக அவ்விடத்தை தொடர்ச்சியான பாதுகாப்பிற்கும் பயன்பாட்டிற்குமான இடமாக மாற்றுவதென்ற தீர்மானம் மட்டக்களப்பு மாநகர சபையின் நேற்றைய அமர்வில் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன், தற்கொலைக்கான மனநிலைக்குள் செல்கின்றவர்களை உள ஆற்றுப்படுத்துகைகளின் ஊடாக அவர்களது மனநிலையை மாற்றம் செய்து கொள்வதற்கான கையடக்கப்பேசி வலையமைப்பின் புதிய அப்ஸ் ஒன்றின் மூலமும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் 15ஆவது பொது அமர்வு, மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர க.சித்திரவேல், மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிதிக்குழு மற்றும் ஏனைய நிலையியற் குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு -செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள், மாதாந்தக் கொடுப்பனவு உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.
அமர்வின் விசேட அம்சங்களாக மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் மட்டக்களப்பு நகரத்தினதும் அதற்கு ஓர் அடையாளமாக இருக்கின்ற கல்லடிப் பாலத்தில் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற தற்கொலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் சில முன்மொழிவுகள் மேயரால் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, அது ஏகமனதாக சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதன்படி, கல்லடிப் பாலத்தில் உல்லாசப் பயணத்துறை சார்ந்த கடைகளை அமைத்து கொடுப்பதன் ஊடாக, அவ்விடத்தை தொடர்ச்சியான பாதுகாப்புக்கும் பயன்பாட்டுக்குமான இடமாக மாற்றுவதென்றும், இவ்வாறான தற்கொலைக்கான மனநிலைக்குள் செல்கின்றவர்களை உள ஆற்றுப்படுத்துகைகளின் ஊடாக அவர்களது மனநிலையை மாற்றம் செய்து கொள்வதற்கான வலையமைப்பின் ஊடாக ‘கோவை’ App எனப்படும் மென்பொருள் உருவாக்கப்பட்டு அதனை கையடக்க அலைபேசியினூடாகப் பயன்படுத்துவதற்கான நடைமுறை ஒன்றும் உருவாக்குதல்.
அதனை பாவனைக்கு விடுதல் தொடர்பாகவும் ஆரயப்பட்டு, உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை உடன் காப்பாற்றுவதற்கு வசதியாக 24 மணி நேர படகு ரோந்து சேவையை அப்பகுதியில் ஆரம்பிப்பதற்கும் சபையால் அனுமதியளிக்கப்படடுள்ளது.
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் வதிகின்ற தகவல் தொழில்நுட்ப தகமை கொண்டவர்களின் தொழில்நுட்பம் சார்ந்த வினைத் திறனையும் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்வதற்கான ஓர் களமாக ஐ.ரி.பார்க் ஒன்றினை ஏற்படுத்துவத்துவதற்கும், அவர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுப்பதற்குமான முதல்வரின் முன்மொழிவும் ஏகமனதாக சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.