தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்துக்கொண்டு பாராளுமன்ற நாற்காலியை மட்டுமே சூடாக்கி கொண்டு திரிகின்ற தமிழ் அரசியல் தலைமைகள் முதலில் உங்களது DNA பரிசோதனை செய்வதை தவிர்த்து கொள்ளவேண்டும்.எமது சகோதர இனத்தின் பல்துறை சார்ந்த வளர்ச்சியையும்,அவர்களின் தூரநோக்கு சிந்தனையையும்,மற்றும் கல்வி,பொருளாதார இலக்குகள் பற்றி ஆழப்பார்வை செலுத்தியும் தமிழ் இனத்தினுடைய வாழ்வாதாரம்,பொருளாதாரம், கல்வி,கலை,கலாசாரம்,விளையாட்டு அதன்பால் பல்துறை சார் வளர்ச்சி போன்ற பல துறைகளில் எமது இனத்தின் வளர்ச்சிப்பாதைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது பற்றியும்,தமிழ்தேசிய கூட்டமைப்பு இனியாவது சிந்திக்க வேண்டுமென வடகிழக்கில் உள்ள பொதுமக்கள்,புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் அண்மைக்கால நிலைப்பாடுகள்,செயற்பாடுகள் சம்பந்தமாக பொதுமக்கள்,புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் மேலும் குறிப்பிடுகையில்:-
தமிழ்தேசிய கூட்டமைப்பில் எதிர்வரும் காலங்களில் இணைந்து கொள்பவர்களுக்கு மரபணு பரிசோதனை செய்வதை தவிர்க்குமாறும்,ஆளுக்காள் நீங்கள் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் குறைகூறுவதை நிறுத்திக் கொண்டு வடகிழக்கு தமிழ்மக்களின் நலன்சார்ந்த விடயங்களை சித்தித்து செயலாற்ற வேண்டும்.ஏன் என்றால் நீங்கள் யாருமே யோக்கியவான்கள் அல்ல என்பது தமிழ்மக்கள் நன்கறிந்த உண்மையாகும்.
இதுதான் எமது தமிழ்மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய இறுதியான சந்தர்ப்பம் ஆகும்.மீதம் உள்ள காலத்திலும் எஞ்சியிருக்கின்றதையும் சுருட்டுவதை சுருட்டிக் கொண்டு ஓடுவதற்கு தாயார் ஆகுங்கள்.இனிவரும் காலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பததை புத்திஜீவிகள், பொதுமக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.
பல்லின சமூகங்கள் வாழ்கின்ற ஐக்கிய இலைக்குள் தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் என்று தமிழ்மக்கள் மூன்று தசாப்தங்களை கடந்து வந்துள்ள நிலையில் இனியும் தமிழ்மக்கள் ஏமாற மாட்டார்கள்.தங்களையும்,தங்களின் வியாபாரத்தையும் பெருக்கிக்கொண்டும்,தங்களின் குடுப்பத்தையும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு செயற்படும் தமிழ்தேசிய கூட்டமைப்பையை சிந்திக்க தெரிந்த மக்கள் நிராகரிப்பார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.
கடந்த 30 வருடங்களில் தமிழ்சமூகம் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளது.வேலைவாய்ப்பு,அபிவிருத்தி,கல்வி,பொருளாதார முன்னேற்றங்கள்,உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட 100 மேற்பட்ட விடயங்களில் பாரிய சரிவுகளை தமிழ்மக்கள் எதிர்நோக்கியுள்ளார்கள்.இருந்தபோதிலும் தொடர்ச்சியாக தமிழ்தேசிய கூட்டமைப்பை நம்பியே வாழ்ந்த தமிழ்மக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தற்போது கையை விரித்துள்ளார்கள்.இன்று கூட்டமைப்பை நாடிச்செல்லும் பொதுமக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் காரியங்களை சாதித்து கொடுப்பதில் அலட்சியைப் போக்கை கடைப்பிடிப்பதால் மாற்றுச் சமூகத்தின் மக்கள் பிரதிநிதிகளை நாடுமளவுக்கு தமிழ்மக்கள் உள்ளார்கள்.இதனால் தமிழ்மக்கள் மூன்றாம்தரப்பிரஜையாக கருதப்படுகின்றார்கள்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினவின் ஆலோசனை,வழிகாட்டலின் பேரில் வைத்தியசாலைகள் கிழக்கில் தரமுயர்த்தப்பட்டு வருகின்றது.சுமார் 6000 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள 13 வைத்தியசாலைகளில் ஒன்று கூட தமிழ் பகுதிகளில் இல்லை.அதில் மூன்று வைத்தியசாலைகள் கிழக்கில் அதாவது ஏறாவூர்,சம்மாந்துறை,பொத்துவில் போன்றன தெரிவு செய்யப்பட்டு அங்ககுரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்று வருகின்றது.சீன அரசாங்கத்தின் 234 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் மட்டக்களப்பு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சுகாதார போஷனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன ஞாயிற்றுக்கிழமை 10.02.2019 அங்குரார்ப்பணம் செய்தார்.இவ்வைத்தியசாலையில் நவீன வசதிகளைக் கொண்ட நோயாளர் விடுதி, மகப்பேற்று விடுதி, இரத்த வங்கி, சத்திரசிகிச்சைக் கூடம் ஆரம்ப சிகிச்சைப் பிரிவு என்பவை அடங்கலாக 3மாடிக் கட்டிடம் அமையப் பெறவுள்ளது.
இவ்வாறு கிழக்கின் நிலைப்பாடு இருக்கையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசை நிலைநிறுத்துவதற்கு,சர்வதேசத்திலும்,உள்நாட்டிலும் களங்கமில்லாத நற்பெயரை ஏற்படுத்தியும் ரணிலுக்காக வழக்கில் வாதாடி வென்று கொடுத்த கூட்டணிக்காரர்களுக்கு இதெல்லாம் தெரியாதா? என தமிழ்மக்கள் கேள்வி கேட்கின்றார்கள்.இவையெல்லாம் சம்பந்தன், சுமந்திரன்,மாவை சேனாதிராசா மற்றும் கிழக்கை பிரதிநிதிப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் விவசாய அமைச்சர்,மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்ற தவிசாளர்கள்,பிரதி தவிசாளர்கள்,உறுப்பினர்கள் போன்றோர்கள் கண்ணைக் மூடிக்கொண்டு இருக்கின்றார்களா? அல்லது இவையெல்லாம் கண்டும் காணாமலும் செயற்படுகின்றார்களா என பொதுமக்கள் கேள்வி கேட்கின்றார்கள்.
தமிழ்மக்களுக்கு தீர்வு பெற்றுத்தருவோம்,இனப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்போம், என்று 30 வருடங்கள் வெற்றுக்கோசம் எழுப்பிவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தற்போது புதிய அரசியல் அமைப்புமூலம் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கொண்டு இருக்கின்றது.புதிய அரசியல்யாப்பு சீர்திருத்தத்திலும் தமிழர்களுக்கு தீர்வு கிடையாது என்பதுதான் உட்கிடையான முடிவாகும்.இவ்வாறு பல ஆண்டுகளை கடந்துள்ளநிலையில் இன்னும் தீர்வு கிடைக்கும் என தமிழ்மக்கள் நம்பத்தேவையில்லை.தமிழ்தேசிய கூட்டமைப்பு உயர்பீட அரசியல் வல்லுநர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்பாவி தமிழினம் நடுரோட்ல நாதியற்று கிடக்கின்றது என்பதை இன்னும் கண்விழித்து பார்க்கவில்லை என்பதுதான் உண்மையாகும்.
தமிழ் மக்களுக்கு மாற்றம் ஏற்படவேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று சேவையாற்றவேண்டும்.
கடந்த நான்கு வருட ஆட்சியில் எந்தவித முன்னேற்றமும் தமிழ் மக்களுக்கு ஏற்படவில்லை. தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் பின்னடைந்த நிலையிலேயே உள்ளனர்.தற்போது அரசாங்கத்தில் ஏற்றப்பட்ட மாற்றம் என்பது தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையினையும் ஏற்படுத்தப்போவதில்லை.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் போட்டிகள்,பொறமைகள் பிரச்சினைகள் காரணமாக எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதைவடையும்.இவ்வாறான நிலையில் அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் பாரிய கட்சியாக தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும்,கருணா அம்மான் கட்சியும் ஒன்று சேர்ந்து கிழக்குத்தமிழர்களை பாதுகாக்கும் என்பதுதான் இன்றைய கிழக்குத்தமிழர்களின் தூரநோக்கு சிந்தனையாகும். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு எவரும் இல்லாத நிலையே இன்று உருவாகியுள்ளது.
கிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்;
வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும்.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இன வீதாசாரம் குறைந்து கொண்டே செல்கின்றது. அரசியல் கொள்கை பாரம்பரியம் பேசிக் கொண்டு காலத்தினை இழுத்தடித்தால் கிழக்கில் தமிழர்கள் மாற்று சமுகங்களிடம் அரசியல் அடிமையாகும் நிலை தோன்றிவிடும்.
1960ஆம் ஆண்டு இதேபோன்று ஒரு அரசியல் சூழ்நிலையேற்பட்டபோது அன்று அதனை தமிழ் அரசியல் தலைமைகள் சரியாக பயன்படுத்தாத காரணத்தினாலேயே இன்று தமிழ் மக்கள் இன்று பல்வேறு இழப்புகளை எதிர்கொள்வதற்கு காரணமாக அமைந்தது.தமது சமூகத்தின் இலக்கினை அடைவதற்காக அரசியல் தலைமைகள் கிடைக்கும் சூழலை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.சிறுபான்மை அரசியல் தலைமைகளுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.குறிப்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பு தூசி பிடித்துள்ள கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்.வாக்களித்த மக்களுக்கும்,பிரதேசத்துக்கும் தேவையான வளப்பக்கீடுகள்,ஒதுக்கீடுகள்,வேலைவாய்ப்புக்கள்,உட்கட்டமைப்பு வசதிகளையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுத்து மாற்றுச்சமூகம் தங்களின் சமூகத்தையும்,இனத்தையும் வாழவைப்பது போன்று தமிழ்மக்களை வாழவைப்பதில் கரிசனை காட்டவேண்டும்.உரிமை,தேசிய கொள்கையுடன் சமாந்தரமாக அபிவிருத்தியையும் பெறவேண்டும்.
30வருடகால யுத்தத்தில் போராட்டத்தில் இணைந்த தமிழ்மக்களும்,அவர்களின் பிள்ளைகள்,அவரது உறவுகள் அழிந்தார்கள்.அழிந்ததுமட்டுமல்ல தமிழர்களின் கல்வி,பொருளாதாரம்,இருப்பு,நிருவாகம்,நிதி,உள்ளிட்ட பல விடயங்கள் அழிக்கப்பட்டுள்ளது.இன்னும் அழிவைச் சந்திப்பதற்கு தமிழ்மக்கள் தயாரில்லை.தமிழ்மக்களை வைத்து கபட நாடகமாடி அரசியல் செய்யும் வங்குரோத்து அரசியல் தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும்.
தமிழர்களின் 30 வருட ஆயுத போராட்டம் 30 வருட அரசியல் போராட்டங்களின் விழைவாக கிடைத்த ஆகக்குறைந்த நிர்வாக மாகாணசபை முறைமையினையும் கிழக்கு தமிழர்கள் அனுபவிக்க முடியாது வேடிக்கை பார்க்கும் நிலையினை மாற்றி 2008-2012 வரை சிவநேசதுரை-சந்திரகாந்தன்(பிள்ளையான்) கிழக்கு மாகாண முதலமைச்சராக பொறுப்பேற்று தமிழரின் இருப்பை நிலைநாட்டினார். அத்துடன் இன,மத,மொழி பேதமின்றி சமத்துவமான ஆட்சியும் நடாத்திக்காட்டினார். ஆனால் 2012 இன் பின்னர் 2015 இன் பின்னர் என என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும்.
தமிழர்களிடம் நில,நிருவாக,நிதி ரீதியாக எப்படி நசுக்கப்படுகின்றனர் என்றும் தெரியும். யார் சரி, யார் பிழை என்று பார்ப்பதற்கான நேரமல்ல இது. எது சரி, எது தவறு என்றே பார்க்க வேண்டும் ஒவ்வொரு அரசியல் கருத்துக்கள் கொள்கைகள் இருக்கும்.இது கொள்கைகளைப் பற்றி பேசி கிழக்கு தமிழரின் இருப்பை இல்லாமல் செய்யும் செயற்பாட்டில் யார் ஈடுபட்டாலும் அதனை அனுமதிக்க முடியாது.2018 உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிந்த பின்னர் கொள்கை பேசியதன் விளைவு கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அன்றைய கட்சிகளை இணைக்கும் முயற்சி தோல்வியடைந்ததன் விளைவு செங்கலடி பிரதேச சபையின் செயற்பாடுகள் மூலம் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
1881ம் ஆண்டு கிழக்கில் 58.96 வீதமாக இருந்த தமிழர்கள் 1981ம் ஆண்டு 42.06 வீதமாகவும்,2012ம் ஆண்டு 39.79வீதமாக குறைவடைந்து கொண்டு செல்கின்றது. கிழக்கு மாகாணத்தில் 617295 தமிழர்கள் 569738 முஸ்லீம்கள் 359136 சிங்களவருமாக இன ரீதியான சனத்தொகையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 49456 மேலதிக சனத்தொகையுடனேயே தமிழர்கள் கிழக்கில் 1ம் இடத்திலுள்ளனர். இந் நிலை இன்னும் 5 வருடத்திலேயோ அல்லது 10 வருடத்திலேயோ மாற்றமடையலாம்.
எனவே அரசியல் கட்சிகள் வடக்குடன் ஒப்பிட்டோ அல்லது ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிட்டோ போவதை ஒத்திவைத்து கிழக்கு மாகாண மக்களின் எதிர்காலம் குறித்து திறந்த மனதுடன் இதயங்களை பேசவைக்க வேண்டும். வாய் வார்த்தையால் பேசிவிட்டுச் செல்லக்கூடாது.கிழக்கு மாகாணத்தின் தமிழர்களின் இருப்பிற்காக வலுவான எதிர்காலத்திற்காக எவ்விதமான ஏற்றுக் கொள்ளக்கூடிய விட்டுக் கொடுப்புகளுடனும் பேசுவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தயாராக உள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.