அதிகாரப்பகிர்வு குறித்து ஆராய விசேட குழு

அதிகாரப்பகிர்வு தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய உடனடி நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, நால்வர் கொண்ட அணியொன்று நியமிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், (28) மாலை, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் பிரதானிகளது கலந்துரையாடலின் போதே, இந்தக் குழு நியமிக்கப்பட்டதென, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

நேற்றை இந்தக் கூட்டத்தில், புதிய அரசமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டதோடு, குழுவில் அங்கம் வகிக்காத திகாம்பரம், சரத் அமுனுகம, பைஸர் முஸ்தபா ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததாகவும், அமைச்சர் கூறினார்.

இதேவேளை, நேற்றைய கூட்டம் தொடர்பில் தமிழ்மிரருக்குக் கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றுதல், தேர்தல் முறைமையில் மாற்றங் கொண்டுவருதல், அதிகாரப் பகிர்வு போன்ற பிரதான விடயங்கள் கலந்துரையாடப்பட்ட போதிலும், அதிகாரப் பகிர்வு விவகாரம் தவிர்ந்த ஏனைய விடயங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தமையால், அவைபற்றிப் பின்னர் பேசலாமென விட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

30 வருடகால யுத்தத்தால் பின்னடைந்துள்ள பிளவுகளைச் சரிசெய்வதற்கு, அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், யுத்த காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை, யுத்தம் நிறைவடைந்த பின்னரும் நிறைவேற்றவில்லை என்று சாடியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நகர்வுகள் தொடர்பில் பட்டியல் ஒன்றைத் தயாரித்து, அடுத்த வாரம் வழங்கவுள்ளதாகத் தெரிவித்த சுமந்திரன், இந்த அறிக்கை தயாரிப்பதற்காக, தன்னுடன் ராஜித சேனாரத்ன, சரத் அமுனுகம, டிலான் பெரேரா ஆகியோரடங்கிய குழு செயற்படுமெனவும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டீ சில்வா, பைஸர் முஸ்தபா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அதிகாரப்பகிர்வு குறித்து ஆராய விசேட குழு

அன்புள்ள வாசகர்களே,நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

Related posts