கொட்டாஞ்சேனை மற்றும் சனநெரிசல்மிக்க பகுதிகளில் வைத்து, தமிழ் இளைஞர்கள் 11 பேரை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை, ஏப்ரல் 17 ஆம் திகதிக்கு, கொழும்பு, கோட்டை நீதவான ரங்க திஸநாயக்கவினால், இன்று (03) ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, கடற்படை முன்னாள் தளபதி, பாதுகாப்பு படைகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீதான விசாரணைகளும் அன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான “நேவி சம்பத்” என்றழைக்கப்படும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, என்பவர் தலைமறைவாக இருப்பதற்கு ஒத்தாசை வழங்கினார் என்றக் குற்றச்சாட்டு, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான நீதவான் விசாரணை, நீதிமன்றத்தில் இன்று (03) எடுத்துகொள்ளப்பட்டபோது, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முதலாவது சந்தேகநபர் லக்சிறி அமரசிங்க மற்றும் இரண்டாவது சந்தேகநபரான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஆகியோர், நேற்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
முதலாவது சந்தேகநபர், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும், 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், இரண்டாவது சந்தேகநபர், 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.