மட்டக்களப்பு மாநகர சபையின் கலை கலாசாரக் குழுவின் ஏற்பாட்டில், அரச கரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கானது (04.06.2019) நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
1956ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள அரசகரும மொழிச் சட்டத்தினை எதிர்த்து தமிழ் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த சத்தியாக்கிரக போராட்டங்கள் மற்றும் சிங்கள மொழியுடன் தமிழ் மொழியையும் அரச கரும மொழியாக அங்கிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் இக் கருத்தரங்கில் தெளிவுறுத்தப்பட்டது.
அத்துடன் அரச அலுவலர்கள் தமது அலுவலகத் தொடர்பாடல்களை தமிழ் மொழி மூலமாக மேற்கொள்வதற்கு சாதகமாகவுள்ள சட்ட ரீதியான ஏற்பாடுகள் பற்றியும், நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாகவும் உத்தியோகத்தர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இக் கருத்தரங்கின் விஷேட பேச்சாளர்களாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி கி.துரைராசசிங்கம் அவர்களும், தென்கிழக்குப்பல்கலைக் கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க.இரகுவரன் அவர்களும் கலந்து கொண்டு தமது கருத்துரைகளை வழங்கினர்.
மாநகரசபையின் கலை கலாசாரக்குழுவின் தலைவர் வேலுப்பிள்ளை தவராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.