பெண் அரச உத்தியோகத்தர்கள் சாரி மற்றும் ஒசரி மாத்திரம் அணிந்து அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொது நிர்வாக மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சிற்கு அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொது நிர்வாக மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சில பிரிந்துரைகளையும் சமர்ப்பித்துள்ளது.
பெண்கள் வெவ்வேறான ஆடைகளை அணிவதுடன், சிலர் தமது கலாசார ஆடைகளையும் அணிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே, இவ்வாறானவர்களுக்கு சாரி மற்றும் ஒசரி மாத்திரம் அணிந்து செல்லுமாறு அறிவிப்பது மனித உரிமை மீறல் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.
அவ்வாறான செயற்பாடுகள் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச பெண் உத்தியோகஸ்தர்கள் சாரி மற்றும் ஒசரி மாத்திரம் அணிந்து அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என பொது நிர்வாக மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சு அண்மையில் சுற்றுநிரூபம் ஒன்றை வௌியிட்டது.
அதேபோன்று, அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் காற்சட்டை மற்றும் மேற்சட்டை அல்லது தேசிய ஆடையை அணிந்து வருமாறும் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த சுற்றறிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டு அதனை மீண்டும் வௌியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மீள அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.