அரசியல்வாதிகளிடம் நாட்டை மீண்டும் மீண்டும் ஒப்படைப்பது மன்னிக்க முடியாத பாரிய குற்றம் – முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஸ்

மல்லிகைத்தீவு நிருபர்
 
அரசியல்வாதிகளிடம் மீண்டும் மீண்டும் இந்நாட்டை ஒப்படைப்பது நாட்டு மக்கள் அறிந்து கொண்டே திரும்ப திரும்ப செய்கின்ற மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாக இருக்கும் என்று தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.
 
இவர் இந்நாட்டு மக்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு
 
கடந்த மூன்று தசாப்த காலமாக தொடர்ந்தேச்சையாக இந்நாட்டை கெடுத்து கெடுத்து குட்டி சுவராக்கிய சிறுமை அரசியல்வாதிகளையே சேரும். இந்நாட்டில் நடந்தேறிய கசப்பான அனைத்து சம்பவங்களுக்கு பின்னாலும் அரசியல்வாதிகளின் கறை படிந்த கரங்கள் நிச்சயம் இருக்கின்றன. இந்நாட்டு மக்களை இனத்துவ ரீதியாக பிரித்து நிரந்தரமான இடைவெளியை ஏற்படுத்தி வைத்திருப்பவர்களும் இந்த அரசியல்வாதிகள்தான். 
 
பிச்சைக்காரனின் புண்ணை போல இனங்களுக்கு இடையிலான பிரிவினைகளையும், பிரச்சினைகளையும் என்றென்றைக்குமாக வைத்து கொண்டு சுய இலாப அரசியல் செய்வதை இவர்களின் பிறவி பலனாக கொண்டிருக்கின்றனர். பிரேத பெட்டிக்காரனுக்கு எப்போதும் மரணங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஒரு பழமொழி சொல்வதை போல இவர்களுக்கு எப்போதும் இனங்களுக்கு இடையில் குரோதங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். 
 
ஆகவே இனங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டு உள்ள பிரச்சினைகளை இவர்கள் ஒருபோதும் தீர்த்து தரவே மாட்டார்கள். மாறாக இவ்வாறான பிரச்சினைகளை மேலும் மேலும் தீவிரப்படுத்தி கூர்மைப்படுத்தியவாறு இருப்பார்கள். ஏனென்றால் இவையே இவர்களின் அரசியலுக்கான இலவச முதலீடு ஆகும். இவர்கள் இவ்வாறான பிரச்சினைகளை தீர்த்து தருவார்கள் என்று மேடைகளில் வாய் வீரம் பேசுவதெல்லாம் ஆடு மழைக்கு நனைகின்றது என்று ஓநாய் அழுத கதையே ஆகும். 
 
ஆனால் இவ்வாறான பிரச்சினைகளை எல்லாம் அரசியவாதிகள் தீர்த்து தருவார்கள் என்று எமது மக்கள் இன்னமும் நம்பி கொண்டுதான் இருக்கின்றார்கள். மாறி மாறி அரசியல்வாதிகளை ஆதரிப்பதையே பழக்க தோஷமாக கொண்டிருக்கின்றனர். அதாவது ஒரே குழிக்குள் மீண்டும் மீண்டும் தெரிந்து கொண்டே விழுவதை தொழிலாக கொண்டிருக்கின்றனர். நெருப்புக்குள் அவையாகவே சென்று விழுகின்ற விட்டில் பூச்சிகளாகத்தான் பாவம் எமது மக்களை பார்க்க வேண்டி உள்ளது. 
 
ஆயினும் தேச பற்றாளனும், மக்கள் நேசனும் ஆகிய நாம் வேடிக்கை மனிதர்களை போல வெறுமனே பார்வையாளனாக இருந்து விட்டு செல்ல விரும்பவே இல்லை. அதனால்தான் நாட்டையும், மக்களையும், அரசியல்வாதிகளின் அரக்கு மாளிகைக்குள் இருந்து மீட்பதற்காக அரசியல்வாதி அல்லாத நாம் இந்த தேர்தலில் தேசிய மக்கள் இயக்கத்தின் வேட்பாளராக களத்தில் குதித்து அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறி இருக்கின்றோம். எம் மீது எந்த அரசியல்வாதியும் எந்த வகையிலும் விரல் நீட்டி குற்றம் சொல்லவே முடியாது. அவர்களை போல் அன்றி எமது  இதயம் தூய்மையானது. கரங்கள் சுத்தமானவை. நோக்கம் நன்மையானது.
 
இத்தேர்தலில் போட்டியிடுகின்ற சக வேட்பாளர்கள் அனைவரை காட்டிலும் நாட்டையும், மக்களையும் வழி நடத்தி செல்வதற்கான தகுதிகள், தகைமைகள் அனைத்தும் எமக்கு அதிகப்படியாகவே இருக்கின்றன. விடுதலையின் அடிப்படை விழிப்பு ஆகும். அரசியல்வாதிகளிடம் இருந்து எமது மக்கள் விடுதலை பெற வேண்டும் என்றால் விழிப்படைந்து அரசியல்வாதி அல்லாத எமக்கு வாக்குகளை அள்ளி வழங்க வேண்டும். மாறாக அரசியல்வாதிகளிடமே மீண்டும் மீண்டும் இந்நாட்டை ஒப்படைப்பது எமது மக்கள் அறிந்து கொண்டே செய்கின்ற மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் ஆகி விடும்.

Related posts