இலங்கையராக ஒன்றிணைந்து கொரோனாவை விரட்டுவோம். அம்பாறை மாவட்ட மேலதிக அரசஅதிபர் ஜெகதீசன் வேண்டுகோள்.

கொடிய கொரோனா இனமததேசம் கடந்து தாண்டவமாடுகின்றது. எனவே நாம் இலங்கையராக ஒன்றிணைந்து கொரோனாவை இலங்கையிலிருந்து மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்திலிருந்தே விரட்டுவோம்.
 
இவ்வாறு கல்முனையில் கைகழுவும் நீர்த்தொட்டி அமைக்கும் செயற்றிட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்துரையாற்றிய அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் வேண்டுகோள் விடுத்தார்.
 
கல்முனை கார்மேல் பற்றிமாக்கல்லுரியின் பழையமாணவர்சங்க கனடாக்கிளையின் நிதிஅனுசரணையில் கல்முனை நெற் ஊடகவலையமைப்பு கல்முனைப்பிராந்தியத்தில் பெரியநீலாவணை தொடக்கம் காரைதீவு வரையிலான பிரதேசங்களில் 15இடங்களில் இந்த கைகழுவும் நீர்த்தொட்டிகளை நிருமாணித்துள்ளது.
 
அதனை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று கல்முனை குருந்தையடி தொடர்மாடிவீட்டுத்தொகுதியில் நடைபெற்றது.
 
முன்னதாக கைகழுவும் தொட்டியில் அதிதிகள் கைகளை தொற்றுநீக்கித்திராவகம் இட்டு கழுவி அங்குரார்ப்பணம் செய்துவைத்தனர்.
 
பின்னர் கல்முனை நெற் இணையத்தள பணிப்பாளர் புவிநேசராசா கேதீஸின் ஏற்பாட்டில் ஊடகக்குழுஇணைப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் சமுகஇடைவெளி பேணிய கூட்டமொன்று நடைபெற்றது.
 
நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் கல்முனை ஆதாரவைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் எ.ஜே.அதிசயராஜ் கல்முனை பற்றிமா தேசியபாடசாலை அதிபர் அருட்சகோ.செபமாலை சந்தியாகு பழையமாணவர்சங்கப்பொதுச்செயலாளர்  எஸ்.கோகுலராஜன் கல்முனை வடக்கு சுகாதாரவைத்திய அதிகாரி டர்கடர் கே.கணேஸ்வரன் பொதுச்சுகாதாரபரிசோதகர் சா.வேல்முருகு ஆகியோருடன் இணையத்தளஇயக்குனர்சபை நிருவாகிகளான எஸ்.சந்திரலிங்கம் சபா.சபேசன் அ.புவிராஜ் வே.அரவிந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
 
அங்கு மேலதிக அரசஅதிபர் ஜெகதீசன் மேலும் உரையாற்றுகையில்:
 
அரசாங்கம் மக்களைக் காப்பாற்றவே ஊரடங்குச்சட்டம் தொடக்கம் அத்தனை செயற்பாடுகளையும் முன்னெடுத்துவருகிறது. எனவே மக்களாகிய நாம் அதற்குப்பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
கல்முனை நெற் இணையத்தளம் காலத்திற்கேற்ப நல்லதொரு சேவையை இப்பிராந்தியத்தில் செய்கிறது.வாழ்த்துக்கள் என்றார்.
 
பிராந்தியசுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் உரையாற்றுகையில்.
 
கொரோனா என்பது ஆபத்தான பயங்கரவைரஸ். இன்னும் நாம் அதன் ஆபத்திலிருந்து விடுபடவில்லை. எனவே சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும். எமது பிராந்தியத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு கல்முனை நெற் உள்ளிட்ட ஊடகங்களும் ஒரு காரணம். ஊடகங்களினுடான விழிப்புணர்வே மக்கள் இன்று அரசின் சட்டதிட்டங்களை சுகாதாரபழக்கவழக்கங்களை பின்பற்றக்காணரமெனலாம். என்றார்.
 
வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் அதிபர் அருட்சகோ.செபமாலை சந்தியாகு பிரதேசசெயலர் ஜே.அதிசயராஜ் ஆகியோர் பேசுகையில்:
 
ஊடகங்கள் இவ்வாறும் சேவை செய்யலாம் என்பதற்கு கல்முனை நெற் ஊடகவலையமைப்பு நல்லதொரு முன்னுதாரணமாகும். உலருணவு வழங்குவதைவிட நீண்டநாட்களுக்கு பயனளிக்கக்கூடிய இத்தகைய கைகழுவும் தொகுதியை மக்களுக்கு அதுவும் இவவாறான சனநெரிசல் கூடுதலாகவுள்ள மாடிவீட்டுத்தொகுதியில் இலவசமாக அமைத்துக்கொடுத்தமை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் என்றனர்.
 
குருந்தையடி மாடிவீட்டுத்தொகுதிமக்கள் குழுமியிருந்த அந்நிகழ்வில் நன்றியுரையை ஊடகக்குழுஇயக்குனர்சபைபிரதிநிதி பிரபல கவிஞர் சபா.சபேசன் நிகழ்த்தினார்.
 
கல்முனை பொலிஸ் நிலையமுன்றலிலும் இந்தக் கைகழுவும் தொட்டி  நிறுவபபட்டு திறந்துவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 
 

Related posts