உரிமை என்னும் ஆணி வேரையறுக்கும் அரசிடம் சரணாகதி அரசியல், சலுகை அரசியலை நாடியவர்களால் எதுவும் சாதிக்க முடியாது

உரிமை என்னும் ஆணி வேரையறுக்கும் அரசிடம் சரணாகதி அரசியல், சலுகை அரசியலை நாடியவர்களால் எதுவும் சாதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொதுத் தேர்தல் வேட்பாளருமாகிய ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
 
தற்கால அரசாங்கத்தின் மிலேட்சத்தனமான செயற்பாடுகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் அமைத்து 07 மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில், அரசாங்கத்தின் கருத்துகள், நடவடிக்கைகள் தமிழ் மக்களை அரவணைக்கின்றதா? அலட்சியப்படுத்துகின்றதா? என்பதை நாம் ஆராய்ந்தறிய வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.
 
தேசியதின விழாக்களில் சிங்களத்தில் மாத்திரம் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும், தமிழில் இசைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு இரு மொழிகளிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டது.
 
தமிழ் மக்களின் தைப்பொங்கல் பண்டிகையை தேசிய பண்டிகையாகக் கொண்டாட முடியாதென அரசு குறிப்பிட்டுள்ளது, இவ்விழாவினைக் கொண்டாடினால்  வீண்செலவு ஏற்படும் என்றது இந்த அரசு. இதற்கு முன்பு தைப்பொங்கல் தேசிய கொண்டாட்டமாகக் கொண்டாடப்பட்டது.
 
இந்துக் கலாசார அமைச்சு, கிறிஸ்தவ விவகார அமைச்சு, இஸ்லாமிய விவகார அமைச்சுகள் போன்றன இல்லாமல் செய்யப்பட்டு, பௌத்தசாசன அமைச்சு மாத்திரமே தற்போதைய அரசாங்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய மதங்களுக்கான கணிப்பு குறைக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் எல்லாம் மரணித்துள்ளனர், அதாவது கொல்லப்பட்டு விட்டனர். விசாரணைகள் இல்லாமல் இந்தக் கருத்தினை ஜனாதிபதி கூறியுள்ளார். அப்படியானால், இவர்களைக் கொன்றவர்கள் யார்? காணாமல் போனவர்களைக் காண்பதாயின் மண்ணைத் தோண்டிப் பாருங்கள் என்று வீரவங்ச கூறியுள்ளார். இக்கருத்து எமது மக்களைக் கேவலப்படுத்துவதாக அமைந்துள்ளதோடு, இதன் பின்னணி என்ன?
 
தமிழர்களின் பிரச்சினை சோறும் தண்ணீரும் மட்டும் தான் வேறு எப்பிரச்சினையும் கிடையாது. மகிந்தானந்த இவ்வாறு கூறியிருந்தார்.
 
தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வோ அரசியல் தீர்வோ சாத்தியமில்லை என ஜனாதிபதி கூறியிருந்தார்.
 
காணாமல் ஆக்கப்பட்டவர்களை தமிழர்கள் மறந்து விடவேண்டும் என்று சொல்லப்பட்டது.
மக்களுக்கான குடியியல் நிருவாகம் அல்லது சிவில் நிருவாகம் இராணுவமயமாக்கலுக்கு உள்ளாகின்றது.
 
யாழ்ப்பாண மிரிசுவிலில் குழந்தை உட்பட 08 அப்பாவிகளைக் கொலை செய்த  இராணுவதிகாரிக்கு நீதிமன்றம் மரணதண்டனைக்கான தீர்ப்பினை வழங்கியது, இவர் தற்போதைய ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலையாகியுள்ளார். ஆனால் ஆனந்த சுதாகரன் உட்பட பல அரசியற் கைதிகளுக்கான பொது மன்னிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
 
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எப்படியாவது 2ஃ3 பெரும்பான்மை பலத்தினைப் பெற்று 19ஆவது யாப்புத் திருத்தத்தினை நீக்கிவிட்டு ஜனாதிபதியின் அதிகாரங்களை உயர்த்துவதற்கான நோக்கத்தினை இந்ந அரசாங்கம் கொண்டுள்ளது, இப்படியானால் நாட்டில் சர்வாதிகாரம் ஓங்க வாய்ப்புள்ளது.
 
கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் இடங்களை கண்டு பிடித்தல் என்ற போர்வையில், தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய நிலங்கள் பௌத்தமயமாக்கலுக்கு உள்ளாகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனைச் செய்வதற்காக முன்னாள் இராணுவத்தளபதியும், பாதுகாப்புச்  செயலருமான கமல் குணரத்ன தலைமயில் 11பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இராணுவ அதகாரிகளும், பிக்குகளும் ஆவர். ஒரு தமிழர் கூட நியமிக்கப்படவில்லை. மேலும், ஞானசார தேரர், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் பௌத்த பூமியே என்றும், இது தொடர்பில் தமிழர்கள் புலம்பக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
 
நாட்டின் பாதுகாப்பு, நீதி, சட்டத்தை மதிக்கும் சமூகத்தினை உருவாக்குவதற்கான 13 பேரைக் கொண்ட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. இதிலும் முன்னாள் இந்நாள் இராணுவ பொலிஸ் அதிகாரிகளே உள்ளனர்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில், குறிப்பாக நல்லாட்சிக் காலத்தில் 30ஃ1, 34ஃ1, 40ஃ1 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. உண்மையைக் கண்டறிதல், நீதியினை வழங்குதல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற விடயங்கள் இவற்றில் காணப்படுகின்றன. பாதிக்கப்பட்ட, தமிழருக்குச் சாதகமான இத்தகைய பிரேரணையை இலங்கையின் தற்போதைய அரசு நிராகரித்து விட்டது. ஆயின் யுத்தகாலத்தில் தமிழருக்கு ஏற்பட்ட அநீதிக்கான நீதி கிடைப்பதற்கான வழிகள் மூடப்பட்டுவிட்டன.
 
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்களை தொற்றுகள் இல்லாத மட்டக்களப்பு, வவுனியா போன்ற தமிழ் பேசும் மக்கள் உள்ள மாவட்டங்களுக்குக் கொணர்ந்து தங்க வைத்திருப்பதும் தமிழ் மக்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.
 
தற்போதைய ஜனாதிபதி தான் பௌத்த சிங்களவர்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்று கூறி வருகின்றார். ஆயின் ஏறத்தாழ 06 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ்பேசும் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தமையை மறந்துள்ளார். கிறிஸ்தவர்களும் ஜனாதிபதிக்குக் கணிசமாக வாக்களித்துள்ளனர் அதனையும் மறந்து விட்டார்.
 
கடந்த நல்லாட்சிக் காலத்தில் அரசியல் தீர்வுக்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சி இடைக்கால அறிக்கை வரை முன்னேற்றம் அடைந்தது. தற்போதைய அரசாங்கத்தில் அத்தீர்வு முயற்சி கைவிடப்பட்டுள்ளது.
 
வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்கனவே செய்யப்பட்ட அபிவிருத்திகள், தொழில் வாய்ப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. (வீடமைப்புகள், கிராம எழுச்சித் திட்ட வேலைகள், பட்டதாரிகள் நியமனங்கள், கருத்திட்ட உதவியாளர் நியமனங்கள்… போன்றவை)
 
இப்படியெல்லாம் கோதபய அரசாங்கத்தின் செயற்பாடுகள் எதிர்மறையாக நகரும் போது அக்கட்சிக்கும், அதன் பின்னால் நின்று சுய நல அரசியல் செய்யும் கட்சிகளுக்கும் எந்த அடிப்படையில் தமிழர்கள் வாக்களிக்க முடியும். உரிமை என்னும் ஆணி வேரையறுக்கும் அரசிடம் சரணாகதி அரசியல், சலுகை அரசியலை நாடியவர்களால் எதுவும் சாதிக்க முடியாது. மொத்தத்தில், தற்போதைய அரசு தமிழ் மக்களை அலட்சியப்படுத்துகின்ற செயல்களில் தான் ஈடுபடுவதாகத் தெரிகின்றது. எனவே, தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். பேரின அடிப்படைவாதிகளுக்கு அடிவருடும் தமிழ்க்கட்சிகள், அபிவிருத்தி என்ற ஏமாற்று வித்தைகள் மூலம் தமிழர்களின் எதிர்காலத்தை இருளாக்கி விடுவர், கவனம் தமிழர்களே மிகக்கவனம் என்று தெரிவித்துள்ளார்.

Related posts