தேர்தலை பகிஸ்கரிக்குமாறு வடகிழக்கு தமிழ்மக்களிடம் கூறமாட்டோம்

(-க. விஜயரெத்தினம்)
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சங்கடமான நிலையினை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் ஸ்ரீசித்தி நாதர் நாகம்பாள் அறநெறி பாடசாலையின் ஆண்டு விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை(20)மாலை4.00மணியளவில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

சிலர் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு மக்களிடம் கூறுகின்றனர். நாங்கள் எக்காரணம் கொண்டும் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு மக்களிடம் கூறமாட்டோம்.தற்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று கட்சியாக இருந்த நாங்கள் ஒரு தீர்மானத்தினை எடுப்பதற்காக ஐந்து கட்சியாக மாறியுள்ளோம்.தற்போது சேர்ந்துள்ள கட்சிகளும் முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகளாகவே உள்ளன.இன்று தமிழ் மக்களின் நலனை மையமாக கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

நாங்கள் எந்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவது என்ற தீர்மானத்தினை எடுக்கவில்லை.ஐந்து கட்சிகளும் இணைந்து பேசியே தீர்மானம் எடுக்கப்படும்.தற்போதுள்ள இரண்டு பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களும் பௌத்த தீவிரவாதத்தினை கொண்டவர்கள் தான்.அதனால் நாங்கள் கவனமாக ஆராய்ந்து வருகின்றோம். சகோதர இனத்தவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தங்களது கைகளுக்குள் வைத்திருப்பதாக சிலர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். எங்களது மண்ணையும், உரிமையினையும் சூறையாடுவதற்கு எந்த வேட்பாளருக்கும் இடமளிக்கமாட்டோம்.அதேபோன்று விரைவில் ஐந்து கட்சிகளும் இணைந்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்களுக்கு கூறும்.

ஜனாதிபதி வேட்பாளரில் ஒருவர் கடந்த காலத்தில் தமிழின அழிப்பினை மேற்கொண்டவராக இருக்கின்றார்.இன்னுமொரு வேட்பாளர் எங்களுக்கு ஆதரவினை ஒருவகையில் தந்தாலும் அவரது தந்தையின் காலத்தில் இன அழிப்பு செய்யப்பட்டதை தமிழர்கள் மறக்கமாட்டார்கள்.அவரும் சில விடயங்களை செய்ய தவறியவர்களாக இருந்திருக்கின்றார்.

தமிழர் பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகளுக்காக இடங்களை கபளீகரம் செய்யும் போது கோவில் குளத்தில் மட்டும் அந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது.கோவில்குளத்தில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆனால் ஆதாரங்கள் இல்லாத பகுதிகளுக்கு சென்று தொல்பொருள் திணைக்களம் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.

ஜனாதிபதி தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சங்கடமான நிலையினை ஏற்படுத்தியுள்ளது.முடிவுகளை எடுக்கும்போது சிந்தித்து ஆராய்ந்து எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ஜனாதிபதியாக வருபவர் முழுமையாக எல்லாவற்றையும் மாற்றிவிடுவார் என்று கூறமுடியாது.ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்ததும் பொதுத்தேர்தல் ஒன்று நடைபெற்று புதிய அரசாங்கம் ஒன்று உருவாகலாம்.

அதேபோன்று முன்னைய நிலை மீண்டும் உருவாகும் என்று நினைப்பதும் தவறாகும்.சர்வதேசத்தின் கண்காணிப்பு இலங்கை மீது அதிகரித்துள்ளது.கடந்த காலத்தில் ஆட்சியாளர்களை கொண்டு வருவதற்கு மிகவும் கஸ்டப்பட்டோம். அதன் பலனை நாங்கள் அனுபவிக்கவில்லை.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும் போது பல விடயங்களை ஆராய்ந்து முடிவுகளை எடுப்போம்.அதனை மக்களுக்கு தெளிவுபடுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts