மட்டக்களப்பிற்கு வெளியிடங்களிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதனால் தொற்று நோயின் தாக்கம் அதிகம்

மட்டக்களப்பிற்கு வெளியிடங்களிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதனால் 14 பொதுச் சுகாதாரப் பகுதிகளிலும் டெங்குவின் தாக்கம் பாரிய பிரச்சினையாகவுள்ளது அது மட்டுமல்லாமல் வேறு வைரஸ் தொற்றுக்களும் நுளம்பினால் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றன என மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியக்கலாநிதி தர்சினி காந்தருபன் தெரிவித்தார்.
தேசிய டெங்கு தடுப்புப் பிரிவின் ஆலோசனைக்கிணங்க உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் சுகாதார புகுதியினருடனான சந்திப்பின் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினரால் டெங்கு நோய் தடுப்பு மற்றும் மீளாய்வு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  (15) நகர மண்டபத்தில் நடைபெற்றது.
மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியக்கலாநிதி எஸ். கிரிசுதன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஷ;ட தொழில்நுட்ப உத்தியோகத்தர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொலிசார் கலந்து கொண்டனர்.
அதிக தொற்றுக்கள் காணப்பட்ட நகரின் உப்போடை, தாமரைக்கேணி, கருவேப்பங்கேணி, கொக்குவில் மற்றும் மாமாங்கம் பகுதிகளில் தற்போது கட்டப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் டெங்கு தவிந்த நீர்க் கொள்கலன்கள் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவு முகாமைத்தவம், நீர் நிலைகள், கிணறுகள், வீட்டின் மேலுள்ள நீர்த்தாங்கிகள், வடிகான்கள் என்பவற்றின் சுகாதார நிலையை உறுதிப்படுத்தல் கட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணமாய் அமைகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தங்களது பின்னூட்டல்களை வெளிப்படுத்திதோடு முகம் கொடுக்கும் சவால்களையும் வெளிப்படுத்தினர். அவர்களுக்கு டெங்கு பரவும் இடங்களை வைத்திருப்போருக்கு எதிராகவும், வியாபார நிலையங்களில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராகவும் மற்றும் வடிகான்களில் கழிவு நீரை விடுவோருக்கு எதிராக பதவி மற்றும் சமூக அந்தஸ்து பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்க மாநகர முதல்வர் கடும் உத்தரவிட்டுள்ளார்.

Related posts