அகில இலங்கையில் மட்டக்களப்பு மாணவர்கள் முதலிடம் பிடிப்பார்கள்: வியாழேந்திரன் சூளுரை

எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட மாணவர்கள் முதலிடத்தை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர பரீட்சையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கலைத்துறையில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 10ஆம் இடத்தையும் பெற்றுள்ள எனது அன்பு மாணவன் டேவிட் சகாயாநாதனுக்கு எனது வாழ்த்துக்களை முதலில் தெரிவித்து கொள்கிறேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் எமது கற்பித்தல் ஊடாக கல்வி கற்று கலைத் துறையில் முதல் நிலையினை மாணவர்கள் பெற்றுள்ளனர்.

அந்த வகையில், 2007ஆம் ஆண்டு பரீட்சையில், கணேசன் சிந்துஜா, அதன்பிறகு பாஸ்கரன் சுதர்சன், தவக்குமார் தவபிரியா, செல்லத்தம்பி தனுஷியா, லோகநாதன் ஸ்ருதி, திலிபனன் பிரபாநந்தி, உதயசீலன் லதுஷனா, சந்திரகுமார் ஷர்மிலா இவ்வாறு தொடர்ச்சியாக மாவட்ட ரீதியில் கலைத் துறையில், முதல்நிலையை பெற்றவர்களாக இருக்கின்றார்கள்.

கடந்த 2014 ஆண்டில் திலிபனன் பிரபாநந்தி மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 10ஆவது இடத்தையும் பெற்றிருந்தார். அதற்கு பின்னர் இம்முறை டேவிட் சகாயாநாதன் மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 10ஆவது இடத்தையும் பிடித்திருக்கிறார்.

மட்டக்களப்பு மாவட்ட சரித்திரத்தில் அகில இலங்கை ரீதியில் பெற்றுக்கொண்ட அதி சிறந்த பெறுபேறாக இந்த பெறுபேறே விளங்குகின்றது. இதேவேளை இனி வரும் காலங்களில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

அத்துடன், எம்மிடம் கல்வி கற்று கலைத் துறை சார்ந்த துறைக்கு 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் தெரிவு செய்யப்படுகின்றனர். எமது கற்பித்தலின் ஊடாக சட்டத்துறைக்கு இதுவரை 54 மாணவர்கள் சட்டத்துறையில் கல்விகற்று வெளியாகியுள்ளனர். சிலர் கற்றுக்கொண்டும் உள்ளனர்.

இம்முறை கல்வி கற்ற மாணவர்களில் 8க்கும் மேற்பட்ட மாணவர்கள் சட்டத்துறைக்கு சென்று கல்வி கற்க இருக்கின்றார்கள். அத்துடன் எமது கல்வி செயற்பாடுகளில் எம்மோடு இருந்து எமக்கு உதவி செய்கின்ற ஏனைய ஆசிரிய பெருந்தகைகளுக்கும் பாடசாலை சார்ந்த, கல்லூரிகள் சார்ந்த ஆசிரியர் குழாத்தினருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.” என கூறினார்.

Related posts