அதிக கட்டணம் அறவிடும் பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை

சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் பஸ் வண்டிகளில் பயணிக்கும் பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறவிடும் பஸ் வண்டிகளினது அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

புத்தாண்டுக் காலத்திற்கு பின்னர், தங்களது கடமையின் நிமித்தம் பஸ்களில் பயணிக்கும்போது, பெரும்பாலான பஸ்களில் அதிக கட்டணம் அறவிடப்படுவதாக, பயணிகள் கவலை வெளியிட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கமைய, பஸ்களில் பற்றுச்சீட்டு வழங்குதல் மற்றும் அதிக கட்டணம் அறவிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கவுள்ளதாகவும், இதற்காக அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

அத்தோடு, பஸ் வண்டிகளில் அதிக கட்டணம் அறவிடப்படும் பட்சத்தில் 1955எனும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

இடது புறமாக முந்திச்செல்லல், அதிவேகமாக வாகனத்தை செலுத்துதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு ரூபா 25,000 அபராதம் விதிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்​ அண்மையில் வௌியிடப்பட்டிருந்தது. குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலைநிறுத்தம் செய்யும் பஸ் வண்டிகளின் பாதை அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டு, புதிய பஸ்களுக்கு அவ்வனுமதிப்பத்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த அபராத தொகை தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts