அதிபர் நியமனத்தில் தமிழ் அதிபர்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது! பா.அரியநேத்திரன்,மு.பா.உ




கல்வி அமைச்சினால் அண்மையில் வழங்கப்பட்ட அதிபர் நியமனங்களில் தமிழ் மொழி அதிபர்பளுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளன என பல அதிபர் தரத்தில் தகுதி உள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு தமிழ் அதிபர்களை பாரபட்சம் இன்றி உள்வாங்க கல்வி அமைச்சு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
தற்போது கல்வி அமைச்சுனால் உள்வாங்கப்பட்ட அதிபர் சேவை ஆட்சேர்ப்பு பட்டியலை பார்க்கும்போது அதிகளவில் சிங்கள மொழிமூலமான அதிபர்களே நியமனம் பெற தகமை பெற்றுள்ளனர் அப்படியானால் தமிழ் அதிபர்கள் ஏன் உள்வாங்கப்படவில்லை என்ற வினா எழுகிறது.
குறிப்பாக வடக்கு கிழக்கு மகாண தமிழ் பாடசாலைகளில் பல பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் அதிகளவில் காணப்படுகின்றது வடக்குகிழக்கில் இருந்து நேர்முகப்பரீட்சைக்கு சென்ற அதிபர்கள் பலர் நியமனம் வழங்காமல் ஓரம்கட்டப்பட்டுள்ளனர் என்ற சந்தேகம் பரவலாக பாதிக்கப்பட்ட கல்வி சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றது.


கடந்தகால அசாதாரண சூழ்நிலையில் உயிரை பணயம் வைத்து ஆசிரியர்களாக வடக்கு கிழக்கு தமிழ்பாடசாலைகளில் கடமைபுரிந்தவர்கள் அதிபர் சேவைக்கு உள்வாங்குவதிலும் பல சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.’
சிரமங்கள் மத்தியில் தமது திறமையை காட்டி மாணவர் செல்வங்களின் உயர்ச்சிக்காக அற்பணிப்புடன் சேவையாற்றிய ஆசிரியர்கள் தகமை அடிப்படையில் அதிபர் சேவையில் தெரிவானாலும் கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையில் திட்டமிட்டு புறக்கணிப்பு இடம்பெற்றதாகவே கருத வேண்டியுள்ளது.
கடந்த கால ஆயுதப்போராட்டம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட இனப்பிரச்சனைக்கான உரிமை மறுக்கப்பட்டது என்பது பொதுவாக கூறப்பட்டாலும் அதில் பல்கலைக்கழக மாணவர்கள் இனரீதியாக தரப்படுத்தல் கொள்கையை இலங்கை அரசு கடைப்பிடித்தமையால் தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதாலும் தமிழ் மாணவர்கள் ஈழவிடுதலைப்போராட்டத்தில் இணைந்த வரலாறுகள் உண்டு.
அதுபோன்ற ஒருநிலையாகவே தற்போது தமிழ்மொழி அதிபர்கள் உள்வாங்காமல் தட்டிக்கழிக்கப்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
எதிர்வரும் நவம்பர் 16,ம் திகதி எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இந்த நாட்டில் இடம்பெறும் நிலையில் தமிழ் அதிபர்கள் உள்வாங்கப்படாமல் பாரபட்சம் காட்டப்பட்டிருப்பது வேதனையான விடயமாகும்.
எனவே கல்வி அமைச்சு உடனடியாக தமிழ் விடுபட்ட அனைத்து அதிபர்களையும் மீண்டும் இணைத்துக்கொள்ள ஆவன செய்யவேண்டும் என மேலும் கூறினார்.  

Related posts