அரச வங்கி முறைமை வலுவாக பராமரிக்கப்பட வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

அரச வங்கி முறைமை வலுவாக பராமரிக்கப்பட வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (23) முற்பகல் பாராளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமர் அலுவலத்தில் வைத்து குறிப்பிட்டார்.
 
பிரகதி வங்கி ஊழியர்கள் சங்கத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விரிவான கலந்துரையாடலொன்றின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
 
தற்போது நிலவும் சவால் மிகுந்த சூழ்நிலைக்கு மத்தியில் அரச வங்கி முறையை வலுவாக பராமரித்தல் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இச்சந்திப்பு இடம்பெற்றது.
 
1996ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்ட மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு, 2014ஆம் ஆண்டில் அதிமேதகு ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் மீண்டும் பெற்றுக் கொடுத்தமை தொடர்பில் பிரகதி வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இதன்போது கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி பாராட்டினர்.
 
ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் தொடர்ந்து நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்தும் இதன்போது கௌரவ பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் அரச வங்கிகளில் தற்போது நிலவும் பிரச்சினைகளை தீர்க்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது கௌரவ பிரதமர் சுட்டிக்காட்டினார்.
 
குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, பிரதமரின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் பிரியந்த ரத்நாயக்க, பிரகதி வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் நிசாந்த சமரசிங்க, தலைமை செயலாளர் ஏ.கே.பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts