ஆசிரியர்களை இடமாற்றுமாறு களுவன்கேணியில் ஆர்ப்பாட்டம்

மத மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ் – முஸ்லிம் மக்களின் இன ஒற்றுமையைச் சீர்குலைக்கும் ஆசிரியர்களை வெளியேற்றுமாறு கோரியும், களுவன்கேணியில் ஆர்ப்பாட்டமொன்று, (08) முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு, களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

மேற்படி வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயின்ற மாணவியொருவர், அங்கு கல்வி கற்பிக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் அறிவுரைக்கமைய, இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றிச் செயற்படுவதாக, ஆர்ப்பாட்டக்காரர்களால் குற்றஞ்சாட்டப்பட்டது.

மாணவியின் மத மாற்றுத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் குறித்த ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரியும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

குறித்த மாணவியின் தந்தை கருத்துத் தெரிவிக்கையில், இப்பாடசாலையில் உள்ள இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்களே, தனது மகளுக்கு மூளைச் சலவை செய்து, மதமாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள் எனக் குற்றஞ்சாட்டினார்.

இதன்படி, தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை, கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவியிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.

மனுவைப் பெற்றுக்கொணட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில், இவ்விடயம் தொடர்பாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் சம்மந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆரிசியர்களிடம் முதற்கட்ட விசாரணைகளை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாணவியின் பெற்றோருடனும் கலந்துரையாடியுள்ளதாகவும் விவரங்களை முழுமையாகத் திரட்டி, மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி, அவரின் உத்தரவுக்கமைய நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts