இனத்துவேசத்தின் உச்சமான ஆட்சியினால் இந்த நாட்டை இன்றைய நெருக்கடிக்குள் தள்ளிவிட்டனர்… (பாராளுமன்ற உறுப்பினர் – த.கலையரசன்)

இந் நாட்டிலே ஒரு நிலையான சமாதானம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் உலக நாடுகள் சொல்லுகின்ற ஒரு உதாரணமான நாடாக இந்த நாடு மிலிர்ந்திருக்கும். இந்த நாட்டின் சிங்களத் தலைவர்கள் இனத்துவேசத்தின் உச்சமான ஆட்சியினால் இந்த நாட்டை மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுபப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

திருக்கோவிலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு இனம், சமூகம் வாழ வேண்டுமாக இருந்தால் அந்த இனத்தின் இருப்பு மிக முக்கியமானதாகும். அந்த அடிப்படையிலேதான் எமது உறவுகள் எமது சமூகத்திற்காக நீண்டகாலமான ஒரு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள். இந்தப் போராட்டம் எதற்கானது என்பதனை தற்போதிருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய, அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த நாடு சுதந்திரம் அடைந்தபொழுது அந்நியர்களிடம் இருந்து நாட்டின் சுதந்திரத்தைப் பெற்றெடுப்பதற்குத் தமிழர்களும் இணைந்தே போராடியிருந்தார்கள். ஆனால் சுதந்திரம் பெற்ற கையோடு இந்த நாட்டின் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டமையும், வெளியேற்றப்பட்டமையுமே வரலாறாக இருக்கின்றது.

அந்த அடிப்படையில் எங்களுடைய தமிழர்கள் ஜனநாயகம், ஆயுதம் என்ற ரீதியில் போராட்டங்களை நடாத்தி இன்று அது மௌனிக்கப்பட்டிருந்தாலும் எமக்கான ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற விதத்தில் எங்களுடைய போராட்டம் இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இன்று இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி என்பது இந்த நாட்டின் சிங்களத் தலைவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று. இந்த நாட்டை மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாட்டிiனையே இந்த நாட்டின் தலைவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற விடயத்தை நாங்கள் தொடர்ச்சியாககக் கூறி வந்திருக்கின்றோம். அதனை இப்போது இந்த நாட்டின் சகல மக்ளும் உணர்ந்திருக்கின்றார்கள். ஒரு குடும்பம் இந்த நாட்டை அழித்திருக்கின்றது என்ற செய்தியைத் தான் உலகமே சொல்லிக் கொண்டிருக்கின்றது.

இந் நாட்டிலே ஒரு நிலையான சமாதானம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் உலக நாடுகள் சொல்லுகின்ற ஒரு உதாரணமான நாடாக இந்த நாடு மிலிர்ந்திருக்கும். 1983ம் ஆண்டு யூலைக் கலவரம்  ஏற்படுத்தப்பட முன்னர் இந்த நாட்டின் பல இடங்களில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தவர்களாகத் தமிழர்களே இருந்தார்கள். இன்று அது கேள்;விக்குறியாக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயங்கள் எல்லாம் இந்த நாட்டில் இருக்கின்ற தலைவர்களுக்குத் தெரியும். அவர்கள் இனத்துவேசத்தின் உச்சத்தில் இருந்து அரசியல் செய்பவர்களாகவே இருந்திருக்கின்றார்கள்.

தற்போது இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியான பிரச்சனைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு மூன்று பேர் கொண்ட குழுவை ஜனாதிபதி நியமித்தார். வடக்கு கிழக்கிலே தமிழர்கள் முதலீடு செய்யும் விடயங்களைக் கையாண்டால் நிச்சயமாக ஆறு மாதங்களுக்குள் பொருளாதார நிலைமைகளைச் சீர்செய்ய முடியும் என்று அந்தக் குழு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. ஆனால், இந்த நாட்டின் தலைவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணமாக இன்று இந்த நாடு மேலும் மேலும் மிக மோசமான பொருளாதாரச் சூழலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

இந்தக் காலத்தில் அரசியல் ரீதியாகவும் மிகவும் ஒரு மோசமான சூழலை நாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். எங்களுடைய மக்களுக்கு இருக்கின்ற தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்து கொள்ள முடியாத ஒரு சூழல். இருந்தும் இந்தச் சூழலை நாங்கள் மிகவும் மதிநுட்பமாகக் கையாள வேண்டும்.

இன்று எமது நாட்டிலே இந்தப் பொரளாதார ரீதியான பிரச்சனைகளைக் காரணமாக வைத்துக் கொண்டு பல வெளிநாட்டு நிறுவனங்களும் வெளிநாடுகளும் இந்த நாட்டைக் கூறு போடுகின்ற நிலைமை காணப்படுகின்றது.

தற்போது கச்சதீவுப் பிரச்சனைன மேலோங்கியிருக்கின்றது. இது மிகவும் ஆழமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயம். இந்த விடயம் இலங்கை இந்திய அரசாங்கத்தினால் கையாளப்பட வேண்டிய தருணம் இதுவல்ல. நாட்டில் நல்ல சூழல் நிலவுகின்ற வேளை இரு அரசாங்கங்களும் பேச வேண்டிய விடயம்.  இதனைக் காலத்திற்கு ஏற்ற விதத்தில் கையாள வேண்டிய இரண்டு அரசாங்கங்களின் கடப்பாடாகவும் இருக்கின்றது.

இந்த அரசாங்கம்  கையாளுகின்ற ஒவ்வொரு விடயமும் இந்த நாட்டை அழிக்கின்ற சீரழிக்கின்ற விடயங்களாகவே காணப்படுகின்றன. தமிழர்களாகிய நாங்கள் இந்த நாட்டிலே நீண்ட காலமாக அடக்குமுறை, வறுமை என்பவற்றைச் சந்தித்தவர்கள். தற்போதிருக்கின்ற சவாலையும் எமது மக்கள் ஏற்று எமது சமூகத்தை மாற்றியமைக்கக் கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். நாங்களும் இந்தச் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவர்களாக எம்மை மாற்றி இந்த சமூகத்தை வாழவைக்க வேண்டும். இன்று அரச ஊதியம் பெறுபவர்கள் கூட அவர்களது வாழ்க்கையை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. எனவே இந்த நிலைமைகளில் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு எமது சமூகம், எமது இனத்திற்காகச் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Related posts