இரணைதீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய விசேட குழு!

இரணைதீவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில்  ஆராய்வதற்காக கடற்படைத்தளபதி தலைமையிலான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி களவிஜயம் மேற்கொள்ளவுள்ளது.
நாடாளுமன்றத்தில்  இன்று (புதன்கிழமை) இரணைதீவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கான தீர்வுதிட்டம் தொடர்பில் ஈ.பி.டி.பியின் பொதுச்செயலாளர் டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இவற்றுக்கு    ஆளுங்கட்சி பிரதம கொரடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக்க பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர்  தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இரணைதீவில் குடியிருந்த 190 குடும்பங்கள் 1992 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து பூநகரியின் முளங்காவில் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட இரணைமாதா நகர், நாச்சிக்குடா, பொன்னாவேலி ஆகிய கிராமங்களில் குடியேறின. தற்போது 392 குடும்பங்கள் வசிக்கின்றன.
மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக இக்குடும்பங்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், 297 வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மீன் வளர்ப்பு அதிகமாக இருக்கும் காலப்பகுதியில் முன்னர் இருந்த பகுதிக்கு வந்து நிரந்தர இடம் அமைக்காது, மீன்பிடியில் ஈடுபடுவதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது சுமார் 400 பேர்வரை அங்கு தற்காலிகமாக தங்கியிருப்பதாக கிளிநொச்சி பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவது சம்பந்தமாக ஆராய்வதற்காக கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கொண்ட குழுவொன்று 15ஆம் திகதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மீள்குடியேற்ற அமைச்சு மேற்கொண்டுள்ளது.
92 ஆம் ஆண்டுக்கு முன்னர் 434 பேரே இங்கு இருந்துள்ளனர். தனியார் காணிகள் கையகப்படுத்தப்படவில்லை. அரச காணிகளிலேயே கடற்படையினர் இருக்கின்றனர். இந்தக் காணிகள் காணி ஆணையாளரின் ஊடாக பெறப்பட்டுள்ளன.
இரணைதீவில் உள்ள அரசாங்க காணிகள் மற்றும் தனியார் காணிகளை அளவிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்தக் காணி அளவிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு அதில் தனியார் காணிகள் இருந்தால் அவற்றை அனுமதியுடையவர்களுக்கு வழங்குவது பற்றி ஆராயப்படும் ” என்றார்,

Related posts