இலங்கைத் தமிழர் தொடர்பில் மோடியின் கருத்து வெறுமனே மேடைப்பேச்சாக இல்லாமல், அவரின் காலத்திலேயே ஒரு தீர்வை எய்துவதாக அமைய வேண்டும்

 இந்தியப் பிரதமர் மேடியின் கருத்து தேர்தலுக்கானதாக, மேடைப்பேச்சாக மாத்திரம் இல்லாமல் உள்ளார்ந்தமாக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். அவரின் காலத்திலேயே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கிடைக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாணசபைப் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

 
இலங்தைக் தமிழர்களின் பிரச்சினை விடயம் தொடர்பில் அண்மையில் இந்தியப் பிரதமர் வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் வகிபாகம் என்பது மிகவும் முக்கியமானதொன்று. இந்நாட்டிலே தமிழர்கள் நாங்கள் எங்கள் உரிமை கோரி போராடிய ஒவ்வொரு போராட்டங்களிலும் இந்தியாவின் ஏதோவொரு அங்கத்துவம் இடம்பெற்றிருப்பதும் மறுக்க முடியாத உண்மை. அந்த அடிப்படையில் தற்போதும் நீண்டுகொண்டிருக்கும் இப்பிரச்சினைக்கு தெற்காசியாவின் மிகப் பிரதானமான நாடாக விளங்கும் இந்தியாவின் நிலைப்பாட்டை அண்மைய தமிழ்நாட்டில் இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்திருப்பதானது மிகவும் வரவேற்கத்தக்கது.
 
ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளில் இந்தியா கரிசனை கொள்ளும், தமிழ் மக்களின் உரிமை தொடர்பான விடயங்களில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றவாறெல்லாம் அவரின் உரை இடம்பெற்றிருக்கின்றது.
 
தமிழர் வரலாற்றில் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்னும் 13வது திருத்தச்சட்டம் மிகவும் முக்கியமானது. தமிழரின் நிலப்பரப்பான வடக்கு கிழக்கு இணைந்த மாநிலங்கள் அதன் மூலம் உருவாக்கப்பட்டு, அதற்கான அதிகாரமும் அதில் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இங்கை அரசானது அந்த அதிகாரத்தினை முழுமையாக வழங்காமல். மாகாணத்திற்கான அதிகாரத்தினைக் குறைத்து வடக்கு கிழக்கினைத் தனித்தனி மாகாணங்களாக ஆக்கியுள்ளது.
 
இவை தொடர்பில் எமது தலைமைகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, பல இராஜதந்திரிகளைச் சந்தித்து கலந்துரையாடியும் இருக்கின்றனர். நாம் வேறு நாடு கேட்கவில்லை. ஒரே நாட்டுக்குள் தமிழர்களுக்கு உரித்தான அதிகாரங்களையே கேட்கின்றோம். தற்போது எமது கோரிக்கைகள் பல வல்லரசுகளை எட்டியிருந்தாலும், அயல் நாடான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அதிக அக்கறையுடன் செயற்பட்டோம். தற்போது அதற்கான பதிலும் கிடைத்துள்ளது.
 
ஆனால் இந்த நிலைப்பாடு வெறுமனே இந்தியாவின் தேர்தல் பிரச்சாரமாக இருக்குமா? அல்லது மோடியின் வார்த்தைகள் நிஜமாக்கப்படுமா? என்ற சந்தேகம் எம்மத்தியில் இருக்கின்றது. ஏனெனில் தற்போது இலங்கை இந்தியாவின் பிடியில் இருந்து விலகும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
 
கிழக்கு முனைய உடன்படிக்கை இரத்து, வடக்கில் மூன்று தீவுகள் சீனாவிற்குத் தாரைவார்ப்பு போன்ற விடயங்களில் இலங்கை இந்தியாவிற்கு இடையில் முறுகல் தோன்றியுள்ளது. இந்த முறுகலினால் வெளிப்படுத்தப்பட்ட கருத்தாக மோடியின் கருத்து இல்லாமல் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் உண்மையான கரிசனை வேண்டும். தமிழ்நாடு இது தொடர்பில் பாரிய அழுத்தத்தினை பிரதமருக்குத் தொடர்ந்து கொடுக்க வேண்டும். எமது தொப்புல்கொடி உறவுகள் என்ற விடயம் வெறும் வார்த்தை வடிவில் இல்லாமல். கொடுக்கும் அழுத்தம் மூலம் நிரூபிக்க வேண்டும் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோள்.
 
இந்த நாட்டில் ஒருஅங்குலம் கூட வெளிநாட்டுக்குத் தரைவார்க்கப்பட மாட்டாது என்று சொல்லி ஆட்சியேறிய இந்த அரசு தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்றது. கிழக்கு முனையம் என்ற விடயத்தைக் காட்டி வடக்கில் மூன்ற தீவுகளை சீனாவிற்கு வழங்கியுள்ளது. இது எவ்விதத்தில் சட்டத்திற்கு உட்பட்ட விடயம். மாகாணசபைகளின் அதிகார எல்லைக்குள் வருகின்ற காணி விடயங்களை மாகாணத்திற்கு வழங்காமல் மத்தியிலே வைத்துக் கொண்டு தங்களுக்கு ஏற்றால் போல் ஆளுநர்களை நியமித்து அவர்களை வைத்து எமது மாகாணங்களுக்குரிய வளங்களைத் தரைவார்க்கும் செயற்பாட்டையே இந்த அரசு செய்கின்றது.
 
அபிவிருத்தி என்ற மாயையில் விழுந்த மக்கள் உருவாக்கிய பிரதிநிதிகள் இவை தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லை. எமது நிலம் போனால் என்ன, எமது மொழி சிதைந்தால் என்ன, எமது மக்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டால் என்ன நாங்கள் வீதி போடுவோம் என்று சொல்லித் தான் வந்தோம் வீதியைப் போடுகின்றோம் ஏனையவற்றைத் தேசியம் பேசுபவர்கள் பாhத்துக் கொள்வார்கள் என்று சொல்லுகின்றார்கள். ஆம் நாங்கள் தேசியம் போசுபவர்கள் தான். எமக்கான உரிமையைத் தான் நாங்கள் கேட்கின்றோம். வெறுமனே வீதிக்காகவும், தொழிலுக்காகவும் எமது உரிமைகளை அரசிற்குத் தாரைவார்க்கவில்லை.
 
எமது மக்கள் வெறுமனே வீதி, தொழிலுக்காக அரசோடு ஒட்டியிருப்பவர்களுக்கு ஆதரவு வழங்கவில்லை. எமது மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் அவர்களின் எதிர்ப்புகளையும் காட்ட வேண்டும் என்றே அவர்கள் வாக்களித்தார்கள். ஆனால் இவர்களுக்கு அரசின் குறைகளைச் சுட்டிக் காட்ட தைரியம் இல்லாமல் மக்களின் மீதும், தேசியம் சார் அரசியல் மீதும் பழி போட்டு அவர்கள் தப்பித்துச் செல்லப் பார்க்கின்றார்கள்.
 
இவ்வாறு எமது நாட்டின் வளங்கள் இன்னொரு நாட்டிற்கு வழங்கப்படுவதென்பது முற்றாக எதிர்க்கப்பட வேண்டிய விடயம். அதிலும் பக்கத்து வீட்டுக் காரனைப் பகைத்து அடுத்த தெருக் காரனுடன் உறவாடுவதும் எமது நாட்டிற்குப் பாதமாகவே அமையும். இலங்கையில் வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பினைச் செய்து வந்தது இந்தியா. பல வீட்டுத் திட்டங்கள், பற்பல கட்டுமானத் திட்டங்கள் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இருக்கையில் இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இலங்கை அரசு செயற்படுவதென்பது தவறானதொரு விடயமாகும்.
 
எனவே இடம்பெறுகின்ற அனைத்து விடயங்களையும் இந்தியா கரிசனையில் கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் தற்போது கொண்டுள்ள ஒரே நிலைப்பாட்டிலேயே விடயங்களை முன்னெடுக்க வேண்டும். மோடியின் கருத்தும் தேர்தலுக்கானதாக இல்லாமல் உள்ளார்ந்தமாக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். அத்துடன் பிரதமர் மோடியின் காலத்திலேயே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கிடைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.

Related posts