இழந்துபோன கல்வியை மீட்க றோட்டரிக்கழகத்தின் உதவி!

கொரோனாவால் இழந்த கல்வியை மீட்க அரசாங்கம் பல வகையான வேலைத்திட்டங்களை அமுல்படுத்தி படிப்படியாக நான்குகட்டங்களாக பாடசாலைகளை திறந்துவருகிறது.
 
 அதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி தரம் 10 ,11 ,12 ,13ஆகிய வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சு மேற்கொண்டுவருகிறது.
 
அதற்கு அணிசேர்க்குமாப்போல் பல்வேறு அமைப்புகள் பாடசாலைகளை மீளஆரம்பிப்பதிலும் இழந்தகல்வியை மீட்பதிலும் ஒத்துழைப்பை நல்கிவருகின்றன.
 
அந்தவகையில், சர்வதேச றோட்டரிக்கழகத்தின் கல்முனைக்கிளை  அம்பாறை மாவட்டத்தில் இதற்கான உதவிகளை வழங்கிவருகிறது.
 
ஆம்.சர்வதேச றோட்டரிக்கழகத்தின் கல்முனைக்கிளை அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள எட்டு பாடசாலைகளுக்கு 10லட்ச ருபா பெறுமதியான கற்றலுபகரணங்களை வழங்கிவருகிறது.
 
அதன் அங்குரார்ப்பண விழா  கடந்த வியாழனன்று  சம்மாந்துறை வலயத்திலுள்ள நாவிதன்வெளிக்கோட்டத்தின் அன்னமலை சிறிசக்தி வித்தியாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
 
வித்தியாலயஅதிபர் பொன்.பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  றோட்டரிக்கழகத்தின் கல்முனைக்கிளைத்தலைவர் றோட்டரியன் த.புஸ்பராசா, செயலாளர் றோட்டரியன் எம்.சிவபாதசுந்தரம், சம்மாந்துறை வலயம் சார்பில் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ,பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எஸ்.அற்புதராஜா உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
 
நிண்டகாலத்திற்குப்பிறகு பாடசாலையில் அதிதிகள் பூமாலைகள் சூட்டப்பட்டு முறையான விழாவொன்று பெற்றோர் ஆசிரியர் மாணவர் சகிதம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
அங்கு கல்முனை றோட்டரிக்கழக செயலாளர் றோட்டரியன் எம்.சிவபாதசுந்தரம் உரையாற்றுகையில்:
 
அவுஸ்திரேலியா நாட்டு கன்பரா றோட்டரிக்கழகம் இவ்வுதிக்கான நிதி அனுசரணையை வழங்கியிருந்தது. அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள எட்டு பாடசாலைகளுக்கு 1.1மில்லியன் ருபா பெறுமதியான கற்றலுபகரணங்களை வழங்கிவருகிறது.
முதற்கட்டமாக இன்று நாவிதன்வெளிக்கோட்டத்திலுள்ள மிகவும் பின்தங்கிய  அன்னமலை சிறிசக்தி வித்தியாலயம் குடியிருப்புமுனை சண்முகா வித்தியாலயம் வீரச்சோலை மகாவித்தியாலயம் ஆகிய 3 பாடசாலைகளின் 187 மாணவர்களுக்கான கற்றலுபகரணங்கள் வழங்கிவைக்கப்படுகின்றன.
 
பாடசாலை பைகள் அப்பியாசக்கொப்பிகள் சப்பாத்துகள் மழைக்கோர்ட் வெப்பமானி உள்ளிட்ட உபகரணங்கள் இதில் அடங்குகின்றன.இதற்கென 3லட்சத்து 30ஆயிரத்து 400ருபா செலவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக இழந்தகல்வியை மாணவர்கள் தங்குதடையின்றி மீளப்பெற்று நற்பிரஜைகளாக வரவேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும். என்றார்.
 
சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா பேசுகையில்:
 
உலகில் போலியோ நோயை முற்றாக விரட்ட அனுசரணைபுரிந்த சர்வதேச றோட்டரிக்கழகம் இப்பிராந்தியத்தில் கடந்தகாலங்களில் பல்வேறு வகையான மனிதாபிமான சேவைகளை செய்துவருவதை நானறிவேன். அதிபர் பாரதிதாசனின் அயராத முயற்சியால் இப்பாடசாலை புதுப்பொலிவுபெற்றுவருவது கண்டு அகமகிழ்வடைகிறேன். மிகவும் பின்தங்கிய இப்பாடசாலை மாணவர்க்கு இவ்வுதவிகள் மிகவும் பிரயோசனமாகவிருக்கும் என்பதில் ஜயமில்லை. றோட்டரிக்கழகத்தினருக்கு எமது வலயம்சார்பில் நன்றிகள் என்றார்.
 
இறுதியில் மாணவருக்கு கற்றலுபகரணங்கள் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டதோடு தலைவர் த.புஸ்பராசா உரையாற்றியதுடன் ஆசிரியர் நன்றியுரையாற்றினார்.
 
 
 

Related posts