ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றிருக்காவிட்டால் தற்போதும் 2018 வவுணதீவு பொலிஸாரின் கொலையையும் மாவீரர் தினத்தையும் தொடர்புபடுத்தியே விசாரித்துக் கொண்டிருப்பார்கள்… (முன்னாள் பா.உ. – பா.அரியநேத்திரன்)

2018, நவம்பர், 27 மாவீரர் தினம் நடந்த மறு நாள் இரவு வவுணதீவு பொலிசார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் என்னை மாட்டுவதற்கான சதி இடம்பெற்றது. ஆனால் கடவுள் செயலால் உண்மை வெளிக்கொணரப்பட்டது. ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றிருக்காவிட்டால் தற்போதும் 2018 வவுணதீவு பொலிஸாரின் கொலையையும் மாவீரர் தினத்தையும் தொடர்புபடுத்தியே விசாரித்துக் கொண்டிருப்பார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
 
வவுணதீவில் பொலிஸார் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை விடுதலைப் புலிகளின் பக்கம் திருப்ப ஆலோசனை வழங்கியவர் யார் என்பதை வெளிக்கொண்டுவர வேண்டும் எனவும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அச்சம்பவத்தை பொறுப்பேற்க அழுத்தம் கொடுத்தவர்கள் யார் என்ற தகவல்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 
 
இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
வவுணதீவு பொலிசாரின் கொலையை மூடிமறைத்து திசை திருப்பும் விதத்தில் என்னையும் இரண்டு தடவை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து விசாரணைகள் இடம்பெற்றன. அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் கூறிய விடயங்கள் உண்மை.
 
2018, டிசம்பர்,12ஆம் திகதி கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மட்டக்களப்புக்கு வருகை தந்து என்னை விசாரித்தனர். அதன்பின்பு மீண்டும் மூன்று மாதங்கள் கடந்த பின்னர் 2019,மார்ச் 18ஆம் திகதி கொழும்பு பயங்கரவாத குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு கூறி மூன்று மணித்தியாலங்கள் விசாரணை செய்தனர்.
 
அந்த விசாரணையின் போது கடந்த 2018 நவம்பர் 27 மாவீரர் நாள் நினைவு தினத்தில் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு பக்கமாக உள்ள தாண்டியடி சந்தியில் எனது வாகனத்தில் நான் இரு இளைஞர்களை அழைத்து வந்ததாகவும் அவர்களே வவுணதீவு பொலிசாரை சுட்டதாக தமக்கு ஒரு தகவல் உள்ளதாகவும் அறிந்துள்ளதால் அந்த இரு இளைஞர்களும் யார் என என்னிடம் பல முறை கேட்டு விசாரித்தனர்.
 
நான் மாவீரர் தினம் 2018 நவம்பர் 27ஆம் திகதி பின்நேரம் இடம் பெறுவது வழமை அன்று பின்நேரம் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்திற்கு நான் சென்று உண்மையில் விளக்கேற்றினேன்.
 
ஆனால், தாண்டியடி சந்திக்கு எனது வாகனத்தில் நானும் சாரதியும் அன்று காலை 10 மணியளவில் சென்று அந்த சந்தியில் மாவீரர் நிகழ்வு இடம்பெறும் தற்காலிக இடத்தில் அமைக்கப்பட்ட கூடாரங்களை வவுணதீவு பொலிசார் சேதப்படுத்தியதாக அங்கு நின்ற சிலர் கூறினர் அதனை பார்வையிட்டுவிட்டு மீண்டும் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்திற்கு சென்றுவிட்டேன் எனது வாகனத்தில் எவருமே வரவில்லை என்றும் கூறினேன்.
 
விசாரணையின்பின்னர் மீண்டும் விசாரணைக்காக சாரதியையும் அழைத்து வரவேண்டும் நேரடியாக உங்கள் வாகனத்தில் இரு இளைஞர்கள் இருந்ததாக கூறும் சாட்சியங்கள் எம்மிடம் உள்ளனர் அவர்களையும் அழைத்து மீண்டும் விசாரிப்போம் என கூறினர்.
 
அதன்பின்னர் 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் புனித தினத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயம் எல்லாவற்றிலும் நடந்ததற்கான விசாரணைகளின் போதே வவுணதீவு பொலிசார் இருவரையும் கொலைசெய்த உண்மையான நபர்களாக இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இருவரின் வாக்குமூலத்தில் அறியப்பட்ட விடயம் அம்பலத்துக்கு வந்தது.
 
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் 2019 ஏப்ரல் 21 இடம்பெறாமல் இருந்திருப்பின் மீண்டும் என்னை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அழைத்து விசாரணைக்கு உட்படுத்தி என்மீதும் திட்டமிட்டு பொய்க் குற்றம் பதியப்பட்டு இந்த கொலைகள் திசைதிருப்பப்பட்டிருக்காலாம் என்பதே உண்மை.
 
மாவீரர் தினத்தையும் வவுணதீவு பொலிசார் படுகொலைகளையும் ஒன்றாக முடிச்சிப்போட்டு அப்போதய நல்லாட்சி அரசாங்கம் திசை திருப்பப் பார்த்தது என்றார்.
 
அத்துடன், அண்மையில் பாராளுமன்றில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமர திசநாயக்க வவுணதீவு பொலிசார் கொலையை திசை திருப்ப எடுத்த முயற்சி பற்றி கூறியது முற்றிலும் உண்மை என்பதை அவர் மேலும் கூறினார்.

Related posts