உகந்தை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய ஆடிப்பூரணை தீர்த்தோற்சவம்

அம்பாரை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய ஆடிப்பூரணை மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம் இன்று (18) ஆயிரக்கணக்கான அடியார்கள் மத்தியில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
கலியுகத் தெய்வமாம் முருகப் பெருமான் மன உகந்து பதி கொண்டு எழுந்தருளிய உகந்தைப் பதியானது இப்பூவுலகிலுள்ள சிறப்பு பெற்ற புண்ணிய தலங்களுள் முக்கிய தலமாக அடியார்களினால் போற்றியும் வழிபடப்பட்டும் வருகின்றது.
இவ்வாறு முக்கியத்துவம் மிக்க உகந்தை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் ஆடிப்பூரணை மகோற்சவ பெருவிழாவானது கடந்த 03ஆம் திகதி இடம்பெற்ற கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து 17ஆம் திகதி வரை இடம்பெற்ற திருவிழாக்களுடனும் இன்று இடம்பெற்ற சமுத்திர தீர்த்தோற்சவம் மாலை இடம்பெற்ற கொடியிறக்கம் நாளை இடம்பெறும் பூங்காவனத் திருவிழாவுடனும் வைரவர் பூஜையுடனும் நிறைவுறவுள்ளது.
இன்று காலை மூலமூர்த்தவரான வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றன. தொடர்ந்து பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் வசந்த மண்டப பூஜை நடைபெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்த முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வகையில் உள்வீதி உலா வந்தார்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான இந்து பௌத்த அடியார்கள் புடைசூழ பக்தர்களின் அரோகரா வேண்டுதலுடன் மங்கள வாத்தியம் முழுங்க வெளிவீதி உலா வந்ததுடன் தீர்த்தோற்சவத்திற்காக வங்கக்கடல் நோக்கி பக்தர்களினால் சுமந்து செல்லப்பட்டார்.
கடற்கரையில் விசேடமாக அமைக்கப்பட்ட பந்தலில் அமர்த்தப்பட்ட முருகப்பெருமானுக்கு அபிசேகம் நடைபெற்றதுடன் பக்தர்களுடன் தீர்த்தமும் ஆடினார்.

Related posts