ஒரு குடும்பத்திற்காக 2 கோடி மக்கள் சாவதா?

 நாட்டிலேயே ஒரு குடும்பம் வாழ்வதற்காக 2 கோடி மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த ஒரு குடும்பத்தின் அராஜக ஆட்சி வழிநடத்தலில் ஏற்கனவே தமிழ் மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்தனர். இன்று முழு நாட்டு மக்களும் அவர்களது ஆட்சியில் பசிபட்டினியால் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.

 இவ்வாறு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

 தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான அமரர் மகாதேவன் சிவனேசன் அவர்களின் ஒரு ஆண்டு நிறைவு நிகழ்வு காரைதீவு விபுலானந்த மைதானத்தில் மாவட்ட அமைப்பாளர் சங்கரி தோழர் தலைமையில் நடைபெற்ற போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் உரையாற்றுகையில்..

 ஒரு குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக இன்று நாட்டு மக்கள் அனைவரும் பசி பட்டினியோடு வரிசையில் காத்து இருக்கிறார்கள் .

அவரை ஆட்சி பீடம் அமர்த்திய அதே மக்கள் இன்று “வீட்டுக்குப் போ..” என்று பரவலாக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

அவர் அதனை கண்டு கொள்ளாமல் இறுமாப்புடன் பதவி விலகாமல் மக்களை மேலும் மேலும் வதைத்து கொண்டிருக்கிறார்.

 1990களில் தமிழர்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்க 1500 ரூபாய் செலவழித்தார்கள். அதுமாத்திரமல்ல வரிசை என்பது அவர்களுக்கு அத்துப்படி .

எனவே தமிழர்கள் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள கூடியவர்கள் .

இன்று நாடு அழுதுகொண்டே காலத்தை கடத்துகிறது. ஒரு குடும்பம் வாழ்வதற்காக, அவர்களைக் காப்பாற்ற வந்த நரி வாழ வேண்டும் என்பதற்காக இரண்டு கோடி மக்களையும் கொன்று கொண்டிருக்கின்றனர்.

 இவர்கள் வீட்டுக்கு போனால் நாட்டுக்கு நன்மை கிடைக்கும்.

 தமிழர்களை கொல்ல எந்த நாடுகளில் பணம் பெற்றார்களோ அதே நாடுகள் இன்று இவர்களை ஒதுக்குகிறது.

 இன்று இவர்களின் அராஜகம் காரணமாக நாடு பெற்ற கடனை அடைக்க முடியாமல் திண்டாடுகின்றது. தமிழர்கள் நினைத்தால் இந்த கடனை அடைப்பதற்கு நிச்சயமாக உதவ முடியும். எமது புலம்பெயர் தமிழ் மக்கள் ஒரு கணம் நினைத்தால் இதனை அடைப்பது பெரிய விடயமல்ல .

ஆனால்,  இவர்கள் வீட்டுக்கு போகவேண்டும் .வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுதந்திரத்தை இந்த அரசு வழங்குமானால் நாடு இந்த கடனை அடைக்க அவர்களால் முடியும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். என்றார்.

Related posts