நாடளாவிய ரீதியில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரதேச செயலகங்களுடன் இணைந்து பிரதேசத்தில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கலைஞர் சுவதம் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. இதற்கமைவாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள கலைகஞர்களுக்கு கலைஞர் சுவதம் வழங்கும் நிகழ்வு இன்று (25) இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள ஒலுவில், அட்டாளைச்சேனை, பாலமுனை, திராய்க்கேணி மற்றும் தீகவாபி ஆகிய பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பத்து கலைஞர்கள் இவ்வாறு கலைஞர் சுவதம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று(25) பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இடம்பெற்றது.
இலக்கியம், பல்துறை, இசைத்துறை, சிறுகதை, பாடல் இயற்றல், ஓவியம் வரைதல், நாட்டார் இலக்கியம் போன்ற துறைகளில் மிளிர்ந்து வரும் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் இதன்போது நினைவுச் சின்னம் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை, நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இனங்களிடையே ஒற்றுமை மற்றும் சமாதானம் ஆகியவற்றைக் கட்டியெழுப்பும் வகையில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள சுவரோவியம் வரைதல் போட்டியில் வெற்றி பெற்ற கலைஞர்களும் இதன்போது சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம்.அப்துல் லத்தீப், உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நசீல் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.