கல்முனை நகர மண்டபத்தை சேதப்படுத்திய நிறுவனமே புனரமைப்பு செலவை பொறுப்பேற்க வேண்டும்; முதல்வர் அறிவுறுத்தல்

கல்முனை நகர மண்டபத்தை சேதப்படுத்திய நிறுவனமே புனரமைப்பு செலவை பொறுப்பேற்க வேண்டும்; முதல்வர் அறிவுறுத்தல்
தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றினால் களஞ்சியசாலையாக பயன்படுத்தப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ள கல்முனை நகர மண்டபத்தை உடனடியாக புனரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்குரிய செலவை குறித்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கல்முனை மாநகர முதல்வர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவுறுத்தியுள்ளார்.
கல்முனை நகர மண்டபத்திற்கு நேற்று மாலை திடீர் விஜயம் செய்து, அதனை அதிரடியாக திறந்து பார்வையிட்ட வேளையில் அதன் மோசமான நிலை கண்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்த முதல்வர், குறித்த நிறுவனத்தின் உரிமையாளரை அழைத்து, மிகவும் ஆக்ரோஷமாக தனது கண்டனத்தை வெளியிட்டார்.
இந்த மண்டபத்தை சில வருடங்களுக்கு முன்னர் குறித்த நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும்போது புதிதாக நிறம் பூசப்பட்டு, மிகவும் அழகிய நிலையில் இருந்ததாகவும் அதனை மாநகர சபையிடம் மீளக் கையளிக்கும்போது அதே நிலையில் புனரமைத்து தர வேண்டியது தங்களுடைய பொறுப்பாகும் எனவும் நிறுவன உரிமையாளரிடம் சுட்டிக்காட்டிய முதல்வர், இதனை விரைவாக செய்து முடிப்பதற்கு மாநகர சபை தீர்மானித்திருப்பதனால், புனரமைப்புக்கான முழுச்செலவையும் பொறுப்பேற்குமாறும் வலியுறுத்தினார்.
இதனை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் குறித்த நிறுவனம் கல்முனையில் வியாபார நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதை தடுக்கும் பொருட்டு அதன் வர்த்தக அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் எனவும் முதல்வர் அறிவுறுத்தல் வழங்கினார்.
கல்முனை மாநகர சபையினதும் கல்முனைக்குடி மக்களினதும் மிகப்பெரும் சொத்தான இந்த நகர மண்டபம் இவ்வாறு சீரழிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். ஆகையினால் மக்களின் வேண்டுகோளின் பேரில், தான் இந்த அவசர நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் முதல்வர் ஏ.எம்.றகீப் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.பைரூஸ், எம்.எஸ்.எம்.சத்தார், சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எம்.நிசார், மாநகர சபையின் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், பொறியியலாளர் ரி.சர்வானந்தன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

Related posts