கவனிப்பாரற்ற நிலையிலுள்ள பாசிக்குடா கடற்கரை சூழலை புனரமைக்க கோரிக்கை

வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாசிக்குடா கடற்கரை கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

இங்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் நாளாந்தம் ஏறாளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் குறித்த கடற்கரைக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நீரோடையினைக் கடக்கும் பாதையானது உட்செல்லுதல் மற்றும் வெளிச்செல்லுதலுக்காக ஒரேயொரு வழியாகவே காணப்படுகிறது அத்தோடு அது மிகவும் சிறியதாகவும் பாதுகாப்பற்ற முறையிலும் அமைந்திருப்பதால் அங்கு வரும் பெருந்திரளான மக்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கும் நிலை காணப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதேவேளை பாசிக்குடா கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்கள் போன்றவற்றால் பல்வேறுபட்ட தொல்லைகள் ஏற்படுவதாகவும் அங்கு வருவோர் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு குறித்த இடத்திடல் முறையற்ற விதத்தில் உணவுக் கழிவுகள் வீசப்படுவதாலும் சுற்றுச் சூழல் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதாலும் சுற்றுலாப்பயணிகளுக்கு அசெளகரிகம் ஏற்படுவதாகவும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக கவனமெடுத்து  சுற்றுலாத்துறைக்கு பெயர்போன இப் பிரதேசத்தை புனரமைக்க வேண்டும் என வேண்டும் விடுக்கின்றனர்.

Related posts