காபன் வெளியேற்றம்: 2050ஆம் ஆண்டில் வடக்கில் அதிக பாதிப்பு

பூகோள ரீதியாக, காபன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050ஆம் ஆண்டில், வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும் மாகாணங்களில், மிக மோசமாகப் பாதிக்கப்படும் மாகாணமாக, வட மாகாணமே அமையுமென, உலக வங்கி எச்சரித்துள்ளது.

வெப்பநிலை, மழை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களால், தெற்காசியாவில் ஏற்படப்போகும் மாற்றங்கள் தொடர்பான அறிக்கையை, உலக வங்கி, நேற்று (20) வெளியிட்டது.

இதில், இலங்கை தொடர்பான பார்வையில், அதிகமாகப் பாதிக்கப்படும் மாகாணமாக, வடக்கு உள்ளது. குறைவான பாதிப்பு, மத்திய மாகாணத்தில் ஏற்படும்.

இதில், வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மோசமான மாற்றங்களைத் தவிர, நீர் கிடைக்கின்ற வாய்ப்பு குறைவாகவுள்ள மாகாணமாகவும், வட மாகாணம் காணப்படுகிறது. வட மாகாணமளவுக்கு, மத்திய மாகாணத்திலும், நீரின் கிடைக்கக்கூடிய தன்மை, குறைவாகக் காணப்படும்.

மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களின் பட்டியலில், யாழ்ப்பாண மாவட்டமே முதலிடத்தில் உள்ளதோடு, முதல் 4 மாவட்டங்களில் 3 மாவட்டங்கள், வட மாகாணத்தைச் சேர்ந்தவையாகும். இரண்டாவது இத்திலுள்ள புத்தளம் மாவட்டத்தைத் தொடர்ந்து, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. அத்தோடு, வடக்கின் ஏனைய மாவட்டங்களான முல்லைத்தீவும் வவுனியாவும், மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் முறையே 9ஆவது, 10ஆவது இடங்களில் காணப்படுகின்றன.

Related posts