கிழக்கில் செவ்வாய் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்.கல்முனைப்பிராந்தியம் தவிர்ந்த பிரதேசங்களுக்கு முன்னுரிமை!மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் தௌபீக் கூறுகிறார்.

கிழக்கு மாகாணத்தில் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை(8) முதல் சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி  வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு  மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
 
வெள்ளிக்கிழமை மாலை  மட்டக்களப்பில் இது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
கிழக்கில் கொரோனாவின் தாக்கம்  தினம்தினம் அதிகரித்துக்கொண்டு வருகின்ற இன்றையகாலகட்டத்தில் பொதுமக்களுக்கான தடுப்பூசி எப்போது செலுத்தப்படும்? என்று கேட்டதற்கு அவர் குறித்த பதிலை வழங்கினார்.
 
கிழக்கில் தொடர்ந்தும் கொரோனாத் தொற்று தினம் தினம் அதிகரித்து வருகின்றது. ஒப்பீட்டளவில் திருமலை மாவட்டம் அதிகூடிய உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளது.
 
மேலும் அவர் கூறுகையில்:
குறித்த கொரோன தடுப்பூசிகள் எதிர்வரும் திங்கட்கிழமை எமக்கு கிடைக்கவிருக்கின்றன. எமது சூம் கலந்துரையாடலின்படி எவ்வளவுதொகை என்பது இதுவரை சொல்லப்படவில்லை. எனினும் செவ்வாயன்று தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட ஏற்பாடாகிவருகிறது.
 
கிழக்கில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பிரதேசங்கள் காணப்படுகின்றன. ஒப்பீட்டளவில் கல்முனைப்பிராந்தியம் குறைந்த பாதிப்பை எதிர்கொண்டுள்ளது தெரிந்ததே.
 
எனவே முதலில் பாதிக்கப்பட்ட முதல் 3 பிரதேசங்களுக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் அடுத்தகட்டமாக கல்முனைப்பிராந்தியத்திற்கும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மூன்று தொகுதியினராக வகைப்படுத்தி இத் தடுப்பூசியினை வழங்குவதற்கு திட்டங்களை வகுத்துள்ளோம். இம்மாகாணத்தில் உள்ள தொற்றா நோயாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.
 
அத்தோடு அரச ஊழியர்கள். கர்ப்பிணிகள் முன்னணி செயற்பாட்டாளர்கள் போன்றோருக்கும் இத்தடுப்பூசியினை வழங்க உத்தேசித்துள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் கொவிட் தொற்று காரணமாக இதுவரை(5) 9900பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றுள்ள கொவிட் தொற்றின் மூன்றாம் அலையின்போது 6035பேர் இம்மாகாணத்தில் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
 
திருகோணமலை மாவட்டத்தில் இந்நோய்த் தொற்று காரணமாக 2511 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1868 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 1303 பேரும் கல்முனை பிராந்தியத்தில்  353 பேரும் இந்நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
 
கொவிட் தொற்றின் போது கிழக்கு மாகாணத்தில் இதுவரை(5) 157 மரணங்கள் பதிவாகியுள்ளது. மூன்றாம் அலையின் அதிகூடுதலான மரணங்கள் திருகோணமலையில் பதிவாகியுள்ளது. இம்மாவட்டத்தில் 88 மரணங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 33 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 18 மரணங்களும் கல்முனை பிராந்தியத்தில்  16 மரணங்களும் பதிவாகியுள்ளதால் கிழக்கு மாகாண மக்கள் மிகுந்த அவதானத்துடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டுமென கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் மேலும் தெரிவித்தார்.

Related posts