கிழக்கு மாகாணத்தின் நிதியை அரசியல் நடவடிக்கைகளுக்காக வீணாக செலவிட்ட முன்னாள் முதலமைச்சர்

கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முன்னாள் முதலமைச்சர் தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக வீணாக செலவிட்டுள்ளதாக தேசிய நல்லிணக்க, அரச கரும மொழிகள் மற்றும் சகவாழ்வு பிரதியமைச்சர் அலிசாஹிர் மெளலான தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

அரசாங்க கணக்கு குழுவின் ஊடாக 2015 ஆம் ஆண்டுக்கான 842 நிறுவனங்கள் தொடர்பாக பரிசீலனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நானும் உள்ளேன். இந்த பரிசீலனையின் போது கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி, ஏறாவூர் உள்ளூராட்சி மன்றங்களின் கணக்கு செலவுகள் தொடர்பில் முரண்பாடான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன்படி கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முன்னாள் முதலமைச்சர் தனது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளமை தெரியவந்தது. இது தொடர்பாக பூரண அறிக்கையொன்றை பெற்றுத் தருமாறு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கோரிய போதும் இன்னும் அதற்கான பதில் அறிக்கை கிடைக்கவில்லை என்றார்.

Related posts