கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுபது பற்றி தமிழ்த் தலைமைகள் இப்போதே சிந்திக்க வேண்டும்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுபது பற்றி  தமிழ்த் தலைமைகள் இப்போதே சிந்திக்க வேண்டும்.கிழக்கில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதற்கு கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட வேண்டும் என பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக அவரிடம் (8.6.2018)  கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்:-

கடந்த உள்ளூராட்சி சபைத்தேர்தல் பழைய முறையில் விகிதாசார தேர்தலாக நடந்திருந்தால் வடக்கு கிழக்கு முழுவதும் தமிழர் பிரதிநித்துவம் உள்ள அனைத்து பிரதேச சபைகளையும்  தமிழ்தேசிய கூட்டமைப்பே அறுதிப்பெரும்பான்மை கொண்டு ஆட்சியை கைப்பற்றி இருப்போம்.

வடகிழக்குத் தாயகத்தை அங்கீகரிக்கின்ற கட்சிகள் ஒன்று சேர்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தாயகத்தைக் கூறு போட நினைக்கின்ற கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையுமாக இருந்தால் பாரிய பிரச்சினைகள் உருவாகும்.

யுத்தம் மௌனிக்கப்பட்ட இந்த 09 வருட காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைப்பதற்கு இங்கு பல்வேறு சக்திகள் ஊடுருவியிருக்கின்றன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பிரதேசவாத அரசியல் செய்வதற்காக பல்வேறு பெரிய கட்சிகள் முதலீடாகப் பணத்தைக் கொடுத்து சிறு சிறு கட்சிகளைத் தோற்றுவிக்கும் செயற்திட்டங்களைச் செய்து கொண்டிருக்கின்றன.

எங்களிடமும் சிலர் வந்தார்கள். “கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்க வேண்டும் என்று”அந்தக் கோரிக்கை சரியானது நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதில் உள்ள சிக்கல்களை மீட்டுப்பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது வடகிழக்கு இணைந்த தாயகத்தினை அடிப்படையாகக் கொண்ட கட்சி. கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் வரையறை செய்யப்பட்ட அதுவும் சில மாவட்டங்களுக்குள் மட்டும் வரையறை செய்யப்படுகின்ற கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைவதாக இருந்தால் அதற்கான சரியான உடன்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும்.

முதலிலே கொள்கை ரீதியாகக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை அங்கீகரிக்கின்ற கட்சிகள், வடகிழக்குத் தாயகத்தை அங்கீகரிக்கின்ற கட்சிகள், ஒன்று சேர்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தாயகத்தைக் கூறு போட நினைக்கின்ற கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையுமாக இருந்தால் பாரிய பிரச்சனைகள் உருவாகும்.

இதே பிரச்சினைதான் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் இடம்பெற்றது. வடகிழக்கு தாயகக் கோட்பாட்டுக்கு எதிரானவர்கள் பலர் வந்தார்கள். இதில் மக்கள் தெளிவு அடைய வேண்டும். முதலில் கொள்கை சரியாக இருக்க வேண்டும். கொள்கை மாறுபடுமாக இருந்தால் அரசியல் பயணமும் மாறுபடும்.

கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு தயாராவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் தற்போதே சிந்திக்கத் தொடங்க வேண்டும். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் விட்ட தவறுகளை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகள் தாங்களே பிரிந்து ஆசனங்களை எடுத்த போதுதான் அந்தச் சிக்கல் ஏற்பட்டது. அந்த நிலை கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் இருந்தால் அங்கும் உள்ளுராட்சி சபைகள் போன்ற நிலைதான் ஏற்படும் என்பதை தலைமை உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கட்சி பார்க்காது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று தான் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் எங்களோடு இருக்கின்ற பங்காளிக்கட்சியொன்று அதனை ஏற்கவில்லை. எனவே பங்காளிக் கட்சிகள் புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுப்பு அடிப்படையில் செயற்படுவோமாக இருந்தால் நிச்சயமாக கிழக்கு மாகாணத்தை நாங்கள் கைப்பற்ற கூடிய வாய்ப்பு இருக்கும்.

உள்ளூராட்சி மன்றங்களில் ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு இந்தத் தேர்தல் முறைதான் காரணம். விகிதாசார முறையில் தேர்தல் இடம்பெற்றிருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பது சபைகளையும் நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியிருக்கும் என்று தெரிவித்தார்.

Related posts