கொரோனா கட்டுப்பாடு தொடர்பில் சாய்ந்தமருது வர்த்தகர்களுக்கு தெளிவூட்டல் !

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கொரோனா கட்டுப்பாடு தொடர்பில் வர்த்தகர்களுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் ஒன்று இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாத் தலைமையில் நடைபெற்றது.
 
இதன்போது நாட்டில் பரவலாக அதிகரித்துவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் சாய்ந்தமருது பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்தும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் பண்டிகை காலத்தில் பொருட்கள் கொள்வனவின் போது பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதை வர்த்தகர்கள் உறுதிப்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது.  மக்கள் நெரிசலாக கூடுவதை எவ்வாறு தவிர்க்கச் செய்வது என்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு, அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது வர்த்தகர்களும் பொது மக்களும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் குறித்து சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
 
இக்கலந்துரையாடலில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக்,  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார், பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எல்.எம். பைலான், எம்.எம்.எம். பைசல், எம்.அஸ்லம், சாய்ந்தமருது வர்த்தக சங்கத் தலைவர் எம்.எஸ்.எம். முபாறக் அடங்கிய வர்த்தக சங்க நிர்வாகிகள், சாய்ந்தமருது வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts